- by Editor
- 2 years ago
மக்களை வெளியேற்றும் உத்தரவினால் தெற்கு காசாவில் 6 லட்சம் பேர் பாதிப்பு!
-
- by Editor,
- 2 years ago
- in உலக செய்திகள்
தெற்கு காசாவில் ஆறு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றும் உத்தரவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளுக்கான பாலஸ்தீன ஏதிலிகளுக்கான தலைவர் பிலிப் லஸாரினி தமது எக்ஸ் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர்களில் அரைவாசி பேர் ஏற்கனவே தமது இருப்பிடங்களை இழந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல், காசாவின் தெற்கு பகுதியில் போரை ஆரம்பித்துள்ள நிலையில், அங்குள்ள பொதுமக்களை வெளியேறுமாறு கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தது.
காசாவில் அமைந்துள்ள தங்குமிடங்கள் மற்றும் பாடசாலைகளில் இடம்பெயர்ந்துள்ள மக்களை உடனடியாக வெளியேற்ற இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது.
ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேலிய இராணுவம் முழு சக்தியுடன் செயற்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.
இந்நிலையில் எகிப்திற்குள் நுழைவதே பாலஸ்தீனியர்களுக்கு சாத்தியமான வழி என்றும் தற்போதைய சூழ்நிலையில் இது மிகவும் கடினமானது என்றும் கூறப்படுகின்றது.
கடந்த இரண்டு நாட்களாக ரஃபா எல்லை மூடப்பட்டுள்ள அதேநேரம் முறையான ஆவணங்கள் இருப்பவர்கள் கூட எகிப்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் முதலில் காஸாவின் மத்திய பகுதிக்கும் பின்னர் கான் யூனிஸ்க்கும் தற்போது ரஃபாவிற்கும் இடம்பெயர நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், காசாவில் இராணுவமயமாக்கப்பட்ட பாதுகாப்பு வலையத்தை உருவாக்கும் இஸ்ரேலின் திட்டத்தை துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் வன்மையாக கண்டித்துள்ளார்.
அத்தகைய யோசனையை விவாதிப்பது கூட பாலஸ்தீனியர்களுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காசாவின் எதிர்காலம் பாலஸ்தீனியர்களின் கைகளில் இருக்க வேண்டும் என்றும் அதன் பாதுகாப்பு ஹமாஸ் இருக்க வேண்டும் என்றும் ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.