- by Editor
- 1 year ago
யாழ் போதனா வைத்தியசாலையில் பேரழிவு - 5 மணி நேர போராட்டத்துக்குப் பின் கட்டுப்பாட்டில் தீ
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலான கடுமையான போராட்டத்திற்குப் பிறகே தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
அதிகாலை நேரத்தில் மருந்து களஞ்சியப் பகுதியில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியதை வைத்தியசாலை ஊழியர்கள் அவதானித்து உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் யாழ் மாநகர சபை தீயணைப்புப் பிரிவு, இராணுவம், விமானப்படை, பொலிஸார் மற்றும் மின்சார சபை அதிகாரிகள் இணைந்து தீயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
களஞ்சியசாலைக்குள் அதிகளவில் எளிதில் தீப்பற்றக்கூடிய அமிலப் பொருட்கள் மற்றும் மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததால், தீ வேகமாக பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீ விபத்தில் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதுடன், களஞ்சியசாலை கட்டடமும் கடுமையாக சேதமடைந்துள்ளது. தற்போது தீ அணைக்கப்பட்ட நிலையில், சேதமடைந்த பகுதிகளை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், மருந்துகளை பாதுகாப்பாக சேமிக்க அண்மையில் அமைக்கப்பட்டிருந்த குளிரூட்டப்பட்ட அறையில் ஏற்பட்டிருக்கக்கூடிய மின் கசிவே தீ விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பக்கட்ட சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.