Friday, October 9, 2026

ஒக்டோபர் மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தம்


ஒக்டோபர் மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தம் இன்று (30) இரவு வெளியிடப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், வழக்கமாக ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் எரிபொருள் விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இதன்படி, இம்முறை விலைத் திருத்தத்தின் போது டீசல் ஒரு லீட்டருக்கு 70 ரூபாய் மானியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் எரிபொருள் விநியோகிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நட்டம் தொடர்பில் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சில நிறுவனங்கள் டீசல் ஒரு லீட்டருக்கு முறையே 120 ரூபாய், 135 ரூபாய், 192 ரூபாய் மற்றும் 247 ரூபாய் வரை நட்டத்தை எதிர்கொள்வதாக அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் மானியம் வழங்கப்படுவதன் காரணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பாரிய நிதிச்சுமையை எதிர்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், வருட இறுதியில் கூட்டுத்தாபனத்திற்கு நட்டம் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், டீசலுக்கு வழங்கப்படும் மானியம் பெட்ரோலுக்கு வழங்கப்படமாட்டாது என்றும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.

you may also like