Saturday, October 10, 2026

கைதா சந்தன கத்ரியாராச்சி வீட்டில் சிக்கிய துப்பாக்கிகள்


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி வசம் ஆயுதங்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கெஸ்பேவ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து பெறப்பட்ட சோதனை பிடியாணையின் பேரில் இன்று (16) அவரது வீடு சோதனையிடப்பட்டது.

இந்த சோதனையின் போது 221 T56 ரகத் தோட்டாக்கள், 2 T56 மெகசின்கள், 7.2 ரகத் தோட்டாக்கள் 31, 0.2 ரகத் தோட்டாக்கள் 103 மற்றும் ஒரு கைக்குண்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட கைக்குண்டு செக்கோஸ்லோவாக்கியாவில் தயாரிக்கப்பட்டது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், வீட்டில் பதிவு செய்யப்பட்டிருந்த 4 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. அவற்றில் ஒன்று சந்தன கத்ரியாராச்சியின் பெயரிலும், மற்ற மூன்று துப்பாக்கிகள் அவரது மனைவியின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களில் 2 சொட்கன் (Shotgun) வகை துப்பாக்கிகளும், 2 9 மில்லிமீட்டர் (9mm) துப்பாக்கிகளும் அடங்குகின்றன.

இவ்வளவு பெரிய அளவில் ஆயுதங்கள் வைத்திருந்ததற்கான காரணத்தை கண்டறிய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தனிப்பட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

you may also like