- by Editor
- 2 years ago
மீனவர்கள் மீது தாக்குதல்: மோடியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம் - ஸ்டாலின் தெரிவிப்பு
-
- by Editor,
- 2 years ago
- in இந்திய செய்திகள்
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் பிரதமர் மோடியின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளோம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முத்துராமலிங்கத் தேவரின் 116 ஆவது ஜெயந்தியை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதன்போது அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்கதையாகி வருகிறது. இது தொடர்பாக பலமுறை வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம். பிரதமர் மோடியின் கவனத்துக்கும் இதனைக் கொண்டு சென்றுள்ளோம்.
இப்போது, டி.ஆர்.பாலு எம்.பியை டில்லி அனுப்பியுள்ளோம், தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து அவர் வெளியுறவு அமச்சரை சந்தித்துப் பேசவுள்ளார். இலங்கைக் கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து அவர் வலியுறுத்துவார் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அவர்களையும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இவ்வாறான தொடர்ச்சியான கைதுகள் மீனவ சமூகத்தினரிடையே மிகுந்த மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்துகின்றது.
தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாமல் போகிறது என உணர்கிறார்கள். நம் மீனவர்களின் உரிமைகளுக்காக மத்திய அரசு மேலும் வலுவாகக் குரல் கொடுக்க வேண்டும் என்றும், அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.
பாக்குநீரிணை பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்.
ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 64 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுகின்றனர். இதனை வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறோம்.
எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக உரிய நிலையான தூதரக வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.