Saturday, October 10, 2026

2027 முதல் 6-ஆம் தரத்திற்கு புதிய கல்வி முறை - பிரதமரின் அதிரடி அறிவிப்பு


2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 6ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்.

இன்று (05) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

முன்னதாக அச்சிடப்பட்ட பாடத்திட்ட தொகுதிகளில் காணப்பட்ட பிரச்சினைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு தனது பணிகளை நிறைவு செய்துள்ளதாகவும், தேவையான திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டு இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மீளாய்வு செய்யப்பட்ட இந்த புதிய தொகுதிகள் இம்மாதத்திலேயே அச்சிட அனுப்பப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய கல்வி மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக ஆசிரியர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சிகள் எதிர்வரும் ஜூன் மாதம் தொடங்கப்படவுள்ளன என்றும், அதற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த மாற்றங்கள் குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஜூலை மாதத்தில் விழிப்புணர்வு மற்றும் விளக்க அமர்வுகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

you may also like