Sunday, October 11, 2026

ரூ.47.9 இலட்சம் புத்தக அச்சிடல் விவகாரம் - முன்னாள் அமைச்சுச் செயலாளர் கைது


புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தசாசன அமைச்சின் ஊடாக புத்தகங்களை அச்சிடுவதற்கான கொள்முதல் நடவடிக்கைகளின்போது, நடைமுறையில் உள்ள விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக குறித்த முன்னாள் செயலாளருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின்படி, சந்தேகநபர் தனக்கு நெருக்கமானதாகக் கூறப்படும் நிறுவனமொன்றிடம் மூன்று சந்தர்ப்பங்களில் மொத்தம் 4,790,000 ரூபாய் பெறுமதியான புத்தகங்களை அச்சிடும் பணியை ஒப்படைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், அச்சிடப்பட்டதாகக் கூறப்படும் புத்தகத் தொகுதி களஞ்சியசாலைக்கு முறையாகப் பெற்றுக்கொள்ளப்படாமலேயே அதற்கான கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம் அரசாங்கத்துக்கு நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டதுடன், தனக்கு நெருக்கமான நிறுவனத்துக்கு அதிகளவிலான இலாபத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் செயற்பட்டதாகவும் சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் ஊழல் குற்றச்சாட்டுக்கு உட்பட்டவை எனத் தெரிவித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, குறித்த முன்னாள் செயலாளரை கைது செய்துள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

you may also like