Monday, October 12, 2026

இரகசியம் - பரகசியம் (21.04.2024)


'கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது' என்பார்கள்.

அண்மையில் யாழ் செயலகத்தில் நடந்த யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சி எம்.பியான சிறீதரன் துளாவியடித்த ஒரு 'ஷொட்' கனகச்சிதமாக விழ வேண்டிய இடத்தில், கணக்காக விழுந்திருக்கின்றது போலும்.

சிறீதரன் அந்தக் கூட்டத்தில் கிணறு வெட்ட, விவகாரத்துக்குரியவர் அவர் வீடு தேடி வந்து விட்டார் என்று இப்போது தெரிகின்றது.

அந்தக் கூட்டத்தில் வடக்கில் சுண்ணக்கல் அகழப்படுவது குறித்து அரசல் புரசலாக அடிபட்ட கதைகளை ஒரு பேச்சுக்குப் போட்டுப் பிடித்தார் சிறீதரன்.

''காங்கேசனதுறையில் இயங்கிய சீமேந்து ஆலைக்காக சுண்ணக்கல் அகழ்ந்த பிரதேசங்களான காங்கேசன்துறை, பலாலி தெற்கு ஆகிய பகுதிகளில் உள்ள பாரிய இரு குழிகளும் இன்றுவரை மூடமுடியாமல் ஆபத்தான நிலையில் குடிமனைகளின் நடுவே உள்ளன.

இந்த நிலையில் தற்போது இன்றும் புத்தூர், மாதகல், இளவாலை போன்ற பல பகுதிகளில் சிலர் இரகசியமான முறைகளில் சுண்ணக்கல் அகழ்ந்து மூடிய பார ஊர்திகளில் திருகோணமலைக்கு எடுத்துச் செல்கின்றனர்.

இவ்வாறு தினமும்10 முதல் 15 வரையான மூடிய பார ஊர்திகளில் கற்கள் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. எந்தத் திணைக்களமாவது இதற்கு அனுமதி வழங்கியதா?'' - என்று துளாவி அடித்துக் கேள்வி எழுப்பினார் எம்.பி.

அப்போது அங்கிருந்த புவிச் சரிதவியல் திணைக்களத்தைச் சேர்ந்த மயூரன் அவ்வாறான எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை எனப் பதிலளித்தார்.

குடாநாட்டில் இருந்து வெளிவரும் ஊடகங்களில் சிறீதரன் எம்.பியின் குற்றச்சாட்டு அடங்கிய செய்தி வெளிவந்த நிலையில், பத்திரிகை மற்றும் சில ஆவணங்கள் சகிதம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் இல்லத்திற்குச் சென்ற யாழ். நகரின் ஒரு பிரபல வர்த்தகர் தாம் தினமும் 4 ஊர்திகளில் மட்டுமே கல் ஏற்றிச் செல்கிறார் எனவும், அவை பணம் கொடுத்துப் பெற்றே எடுத்துச் செல்லப்படுகின்றன எனவும் எம்.பியிடம் விளக்கம் கூறியிருக்கின்றார்.

ஆகையால் மாவட்டச் செயலகத்தில் எம்.பி. தெரிவித்த கூற்றிற்கு அவரே மறுப்புத் தெரிவிக்க வேண்டும் என அந்த 'நகர வர்த்தகர்' தரப்பில் சற்றுக் காட்டமாகக் கூறப்பட்டதாகவும் தகவல்.

இதன்மூலம் தினமும் 4 பார ஊர்தி கல் யாழில் இருந்து எடுத்துச் செல்லப்படுவது உறுதியாகியுள்ளது என்பது மட்டும் இப்போதைக்கு உண்மையாகியுள்ளது. 

you may also like