Friday, October 9, 2026

20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஜப்பானில் கோலாகலமாக ஆரம்பம்


20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஜப்பானின் ஐச்சி மற்றும் நகோயா நகரங்களை மையமாகக் கொண்டு இன்று (19) கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.

அக்டோபர் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இம்முறை ஆசிய விளையாட்டு விழாவுக்கு ‘Imagine One Asia’ எனும் கருப்பொருள் சூட்டப்பட்டுள்ளது.

ஆசிய ஒலிம்பிக் பேரவையின் கீழ் உள்ள 45 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுடன், முதன்முறையாக ஆசிய அகதிகள் குழுவும் இணைந்து மொத்தம் 46 அணிகள் இம்முறை போட்டிகளில் பங்கேற்கின்றன.

மூன்றாவது முறையாக ஜப்பானில் ஆசிய விளையாட்டு விழா

ஜப்பான் ஆசிய விளையாட்டு விழாவை நடத்துவது இது மூன்றாவது முறையாகும்.

இதற்கு முன்னர் 1958ஆம் ஆண்டு டோக்கியோவிலும், 1994ஆம் ஆண்டு ஹிரோஷிமாவிலும் ஆசிய விளையாட்டு விழா நடைபெற்றிருந்தது.

இம்முறை போட்டிகளின் தொடக்க மற்றும் நிறைவு விழாக்கள் உள்ளிட்ட முக்கிய தடகளப் போட்டிகள் நடைபெறும் பிரதான அரங்கமாக 35,000 ஆசன வசதிகளைக் கொண்ட ‘பலோமா மிசுஹோ’ விளையாட்டரங்கம் பயன்படுத்தப்படவுள்ளது.

11,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் 11,000க்கும் அதிகமான வீர வீராங்கனைகளும், சுமார் 6,000 அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

மொத்தம் 43 விளையாட்டுப் பிரிவுகளின் கீழ் 469 போட்டி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

புதிய விளையாட்டுகள் அறிமுகம்

இம்முறை ஆசிய விளையாட்டு விழாவின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக புதிய விளையாட்டுப் பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி Padel, Teqball, Surfing உள்ளிட்ட விளையாட்டுகளுடன், முதன்முறையாக Virtual Taekwondo போட்டியும் இடம்பெறுகிறது.

ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டு விழாவாகக் கருதப்படும் ஆசிய விளையாட்டு விழா, கண்டம் முழுவதிலுமுள்ள முன்னணி வீர வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் முக்கிய சர்வதேச விளையாட்டு அரங்கமாக அமைந்துள்ளது.

you may also like