- by Editor
- 2 years ago
தேர்தல் முடிவுகள் 2024: பா.ஜ.க. கூட்டணி 290+, இண்டியா 220+
இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் சூழலில் நண்பகல் 12 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 298 இடங்களிலும், இண்டியா கூட்டணி 228 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் 20 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
இந்தப் போக்கு மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் சூழல் உருவாக்கி வந்தாலும், கடும் நெருக்குதலுடன் கூடிய வெற்றியையே பெறும் என்பது தெரிகிறது.
இத்தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், தி.மு.க, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது 543 மக்களவை தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வான நிலையில் எஞ்சிய 542 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
80 மக்களவை தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேசம் மக்களவை தேர்தல் வெற்றியை உறுதி செய்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
அந்த வகையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் உ.பி.யில் பா.ஜ.க. 70+ இடங்களைக் கைப்பற்றும் எனக் கூறிய நிலையில் அங்கே சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி பா.ஜ.கவுக்கு கடும் சவால் விடுத்து வருகிறது.
தேர்தல் ஆணைய இணையத்தில் 11.45 மணிக்கு பகிரப்பட்ட தகவலின்படி உ.பி.யில் சமாஜ்வாதி - காங்கிர கூட்டணி 43 இடங்களிலும், பா.ஜ.க. 34 தொகுதிகளிலும், பிற கட்சிகள் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன. இது பா.ஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.யில் பா.ஜ.கவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருந்தாலும் கூட டெல்லி, பிஹார், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம் என இந்தி இதய மாநிலங்களில் பா.ஜ.கவுக்கு சாதகமான போக்கே நிலவுகிறது. மேற்குவங்கத்தில் திரிணமூல் - பா,ஜ.க, இடையே கடும் சவால் நீடிக்கிறது.