Thursday, October 8, 2026

இரகசியம் - பரகசியம் (12.12.2023)


தமிழர் தாயகத்தில் - குறிப்பாக வடக்கில் - சாதாரண குடும்பங்களை நெருக்கடியில் ஆழ்த்தும் முக்கியமான விடயம் பிரபல பாடசாலைகளில் தமது பிள்ளைகளைச் சேர்ப்பதாகும். அதற்காக முதலாமாண்டு அனுமதிக்குப் படுகின்ற அல்லோலகல்லோலம், புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பிள்ளையைத் தயார்படுத்தல் என்று நடக்கும் திருவிழா எல்லாம் சொல்லி மாளாதவை.

இவற்றில் தோற்றால் பின்னர் நடக்கும் அக்கப்போர் பல குடும்பங்களில் பிரளயம்தான்.

ஆனால் தென்னிலங்கையில் இவ்விடயத்தை ஒட்டி வேறு ஓர் ஊழலும் நடக்கின்றமை புள்ளிவிவரங்களுடன் வெளியாகியுள்ளது. அதில் வடக்கின் வகிபாகம் எவ்வளவு தூரம் உள்ளது என்பது இனித்தான் கண்டறியப்பட வேண்டும்.

தெற்கில் 2020 ஜனவரி முதல் மே 2022 வரையான இரண்டரை ஆண்டு காலத்தில், கல்வி அமைச்சின் செயலாளரால் நேரடியாக வெளியிடப்பட்ட கட்டளைக் கடிதங்களின் அடிப்படையில் 2,237 மாணவர்களை இடைநிலைத் தரங்களுக்குச் சேர்க்குமாறு 37 பிரபல அரசுப் பள்ளிகளின் அதிபர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். தேசியக் கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையின் மூலம் இவ்விடயம் அம்பலமாகியுள்ளது.

பெரும்பாலான கடிதங்கள் ஒரு கட்டளை வடிவத்தில் இருந்தன என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. "சம்பந்தப்பட்ட பிள்ளையைப் பாடசாலையில் சேர்த்து விட்டு, அதை எனக்கு உறுதிப்படுத்தவும்" என்று அக்கட்டளைகள் அமைந்துள்ளன.

கொழும்பு ஆனந்தா கல்லூரி, கொழும்பு விசாகா வித்தியாலயம், கொழும்பு றோயல் கல்லூரி, கொழும்பு சிறிமாவோ பாலிகா வித்தியாலயம் மற்றும் கொழும்பு நாலந்தா கல்லூரி என்பன இத்தகைய அதிக உத்தரவுகளைப் பெற்ற பாடசாலைகளாகும்.

இந்த காலகட்டத்தில் செயலாளரால் இவ்வாறு வழங்கப்பட்ட மொத்தக் கடிதங்களின் எண்ணிக்கை 4,775 க்கும் அதிகமாக இருந்தன. அவற்றில் பெரும்பாலானவை - 72 சதவீதம் - அமைச்சர்கள், திணைக்களத் தலைவர்கள், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் நாடாளுமன்றம் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகள், பிரதிநிதித்துவங்கள் மற்றும் உத்தரவுகளுக்கு அமையும் வகையில் எழுதப்பட்டவை.

பாடசாலகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான விடயம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தமையினால் அதையொட்டி அமைச்சரவை சில, பல வழிகாட்டுதல்களை வழங்கியது. அவற்றின் அடிப்படையில் கல்வி அமைச்சின் அதிகாரிகள் அதற்கான சுற்றறிக்கைகள், அறிவுறுத்தல்கள் மற்றும் அளவுகோல்களையும் வழங்கினர். ஆனால் இப்போது அவர்களே தங்கள் சொந்த வழிகாட்டுதல்களை மீறிவருகின்றனர் எனக் கூறப்படுகின்றது.

தேசிய பாடசாலைகளில் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான நிபந்தனைகளை கல்வி அமைச்சின் செயலாளர் விடுத்துள்ளார். ஆயினும், 2021 இல் ஜனவரி மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் செயலாளரால் வழங்கப்பட்ட 69 சதவீத கடிதங்கள் நிபந்தனையின்றி மாணவர்களை தங்கள் பள்ளிகளில் சேர்க்க அதிபர்களுக்கு அனுமதி - அழுத்தம் - வழங்கியுள்ளன. கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில், 1,630 கடிதங்களில் 97 சதவீதம் இதே போக்கைக் காட்டின.

முறையான சேர்க்கை விண்ணப்ப செயல்முறை கூட இல்லாமல், மற்றப் பெற்றோருக்கு வழங்கப்படாத சலுகைகள் கல்வி அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு வழங்கும் விதத்தில் உத்தரவுகள் பல்வேறு அதிபர்களுக்கு கல்வி அமைச்சின் செயலாளரால் நேரடியாக வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகின்றது.

இடைநிலைத் தரங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக அமைச்சின் செயலாளர் ஆண்டு முழுவதும் கடிதங்களை வழங்கியதன் காரணமாக அதிபர்கள் 'தங்கள் கடமைகளில் அதிருப்தி அடைந்துள்ளனர்' என்பது ஆய்வு அறிக்கையில் அவதானிக்கப்பட்டது.

பெற்றோர்களும் இவ்வாறான கடிதங்களுடன் பாடசாலைக்குத் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தனர். இத்தகைய கட்டளைகளை ஏற்று பிள்ளைகளைக் குறுக்கு வழியில் அனுமதிப்பதால், அவை பற்றி அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு வெளித் தரப்பினர் தொலைபேசியில் தொடர்ந்து விசாரித்து, கேள்வி எழுப்பி, நியாயம் கேட்டு, அதிபர்களைத் தொல்லை பண்ணுகின்றனர். இவ்விடயத்தில் அதிபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு செயலாளர் செவிசாய்க்கவில்லை என்று அதிபர்கள் தரப்பில் குறை கூறப்படுகின்றது.

காலியிடங்கள் இல்லாத நிலையில் இவ்வாறான கட்டளைகளுக்கு அமைய மாணவர்களைச் சேர்ப்பதில் அதிபர்கள் சிரமப்படுகின்றார்கள் என்றும் சுட்டப்பட்டது.

தகுதியான பல மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களால் செல்வாக்கு மிக்க குழுக்களின் ஆதரவைப் பெறமுடியாதமையால், 'பிரபலமானவை' என்று அங்கீகரிக்கப்பட்ட தேசிய பாடசாலைகளில் அனுமதி பெறும் விடயத்தில் சமமான வாய்ப்பை இழந்துள்ளனர் என்று ஆய்வுவறிக்கை சுட்டுவதும் கவனிக்கத் தக்கது.

இந்த ஆய்வறிக்கை தொடர்பில் இன்னொரு வேடிக்கையும் உண்டு.

வெளித் தரப்பினரின் தலையீட்டையும், கல்வியின் தரம் மேலும் மோசமடைவதையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

ஆனால், இந்த ஆய்வைச் செய்ய நியமிக்கப்பட்ட குழுவில் கூட, கல்வி அமைச்சரின் தனிப்பட்ட ஊழியர் ஒருவரை ஆய்வு முடிவுகளை மேற்பார்வையிட கல்விச் செயலாளர் நியமித்தார் என்று கூறப்படுகின்றது. இதனால் ஆய்வுக் குழுவில் இருந்த பொது அதிகாரிகள் அவர்களின் தொழில்முறை அறிவு, அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதில் நெருக்கடி ஏற்பட்டது என்று சுட்டப்பட்டது.

கல்வித் துறையை ஒரு கைபார்க்காமல் இவர்கள் விடமாட்டார்கள் போலும். 

you may also like