Tuesday, October 6, 2026

‘Clifton Chronicles’ படைப்பாளி ஜெஃப்ரி ஆர்ச்சர் மறைவு - இலக்கிய உலகில் சோகம்


பிரபல பிரித்தானிய எழுத்தாளரும் முன்னாள் அரசியல்வாதியுமான ஜெஃப்ரி ஆர்ச்சர் தனது 86ஆவது வயதில் காலமானார்.

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான தனது எழுத்துலகப் பயணத்தில், ‘கேன் அண்ட் ஏபல்’ (Kane and Abel) மற்றும் ‘கிளிஃப்டன் க்ரோனிக்கிள்ஸ்’ (Clifton Chronicles) உள்ளிட்ட பிரபலமான படைப்புகள் மூலம் உலகளவில் 300 மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்களை விற்பனை செய்துள்ளார்.

தனது நாவல்களின் கதைக் களங்களை பெரும்பாலும் சொமர்செட் மாகாணத்தில் அமைந்துள்ள தனது சொந்த ஊரான வெலிங்டனை மையமாகக் கொண்டு ஆர்ச்சர் உருவாக்கியிருந்தார்.

எழுத்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், தனது இல்லத்தில் “திடீரெனவும் அமைதியாகவும்” அவர் உயிரிழந்ததாக அவரது பதிப்பாளரான ஹார்பர்காலின்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ச்சர் கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார். 1987ஆம் ஆண்டு டெய்லி ஸ்டார் நாளிதழுக்கு எதிராக அவர் தொடர்ந்த அவதூறு வழக்கில் பொய் கூறியதும், நீதிமன்றத்தை ஏமாற்றியதும் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2001ஆம் ஆண்டு போலிச் சாட்சியம் அளித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்தார்.

1940ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி வடக்கு லண்டனில் பிறந்த ஜெஃப்ரி ஆர்ச்சர், 1969ஆம் ஆண்டு லிங்கன்ஷயரில் உள்ள லூத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

அவர் ஐந்து ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியதுடன், பின்னர் கன்சர்வேடிவ் கட்சியின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார்.

you may also like