Thursday, October 8, 2026

மைத்திரி தொடர்பான வழக்கு ஏப்ரல் 10 வரை ஒத்திவைப்பு


உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வழங்கிய வாக்குமூலம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 10ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிமன்றத்தில் நேற்று இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் முன்னிலையாகியிருக்கவில்லை.

எனினும், தான் ஏற்கனவே இந்தவிடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளதால் நேற்று வாக்குமூலம் வழங்க வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதிமன்றத்துக்குத் தமது சட்டத்தரணி ஊடாக அறியப்படுத்தியிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்குத் தெரியும் என்று மைத்திரிபால கடந்த மாதம் 22ஆம் திகதி ஊடகங்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

you may also like