Wednesday, October 7, 2026

யாழ். தனியார் பஸ் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட கருச்சிதைவு!


யாழ்ப்பாணம் நகரின் தனியார் பஸ் நிலையப் பகுதியில் நேற்று சனிக்கிழமை சிசு ஒன்றின் கருச்சிதைவு கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விவரங்கள் வருமாறு:-

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்குப் பின்புறமாக பெண்ணொருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிக்கொண்டிருந்து விட்டு, திடீரென அங்கிருந்து மறைந்துள்ளார். அதன் பின்னர், தனியார் பஸ் நிலையப் பகுதி வீதியில் சுமார் 6 முதல் 7 மாதங்கள் மதிக்கத்தக்க கரு ஒன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸாரும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்த யாழ். நீதிவான் லெனின்குமார், விசாரணைகளை முன்னெடுத்தார். அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கமரா காட்சிகளின் உதவியுடன் சந்தேகநபரைக் கண்டறிய மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறும், மீட்கப்பட்ட கருவை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும் பொலிஸாருக்கு நீதிவான் பணிப்புரை விடுத்தார்.

நீதிவானின் உத்தரவுக்கமைய, மீட்கப்பட்ட கருச்சிதைவை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.

இந்தச் செயலில் ஈடுபட்ட பெண்ணைக் கண்டறியும் நோக்கில் யாழ். பொலிஸார் தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

you may also like