- by Editor
- 1 year ago
இரகசியம் - பரகசியம் (19.09.2024)
ஜனாதிபதித் தேர்தல் பிரசார காலம் முடிவுக்கு வந்துவிட்டது. இனி தேர்தல் பிரசாரங்களாக அமையும் செய்திகள், கட்டுரைகள், விவரணங்கள் போன்றவற்றை ஊடகங்கள் வெளியிடக்கூடாது. இது தேர்தலுக்கு முந்திய அமைதிக் காலம்.
நேற்று நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரம் முடிந்து விட்டது. என்றாலும் பத்திரிகைகள் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்ற கூட்டங்கள் பற்றிய செய்திகளை வெளியிட முடியும்.
நேற்று நடைபெற்ற ஊடகக் கூட்டம் ஒன்றில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்த சில கருத்துக்களை என் பத்தியில் கோடி காட்டுவது பொருத்தமானது என நினைக்கிறேன்.
தமிழ்த் தலைவர்கள் தமிழ் தேசியம் பற்றிப் பேசுகிறார்கள்.
தேச விடுதலை, இன விடுதலை, அதற்கான போராட்டங்கள், தியாகங்கள் குறித்து எல்லாம் முழங்குகின்றார்கள். மாவீரர் தினத்தில் தலைவர் பிரபாகரன் போல தோற்றமளித்து விளக்கேற்றினால்தான் தேசியவாதிகள். மற்றெல்லோரும் தேச விரோதிகள் என்கிறார்கள்.
ஆனாலும் அத்தகைய தலைவர்கள் குறித்து மனோ கணேசன் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டி அவற்றைத் தேடிப் பாருங்கள் என்று தமிழ் மக்களிடம் கூறி இருக்கிறார்.
இரண்டு வருடங்களாத் தேசிய இனப் பிரச்சினைத் தீர்வுக்கு காத்திரமாக எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு தமிழ் அரசியல்வாதிகளுக்கு முறையற்ற 'பெர்மிட்' சலுகைகளையும் லஞ்சமும் கொடுத்து ஆள் பிடிப்பவர் யார் என்று தேடிப் பாருங்கள் என்று அவர் கூறியிருக்கின்றார்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை இந்தப் பிரகிருதிகளை அவர்கள் தேடிப் பிடிக்கத் தேவையில்லை. 'பெர்மிட்'லஞ்சம் கொடுத்த கேடி யார்? அவற்றை வாங்கிக் கோடி கோடியாய்ச் சுருட்டிய கேடிகள் யார் யார் என்பவை எல்லாம் தமிழ் மக்களுக்கு அத்துப்படி. நன்கு தெரியும்.
பெர்மிட்டையும் லஞ்சங்களையும் வாங்கிக் குவித்தவர்கள் அந்த சுத்துமாத்தை மூடி மறைப்பதற்காக தேசிய வேடம் அணிகிறார்கள்.
உண்மைகளை உணர்ந்துள்ள தமிழ் மக்கள் அதன் பிரதிபலிப்பை நாளை மறுதினம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். நம்பலாம்.