Friday, October 9, 2026

அடுத்தவன் போனை வச்சிருந்தா 2 வருஷம் சிறை - சட்டச் சிக்கலில் இருந்து தப்பிக்க காவல்துறை காட்டும் வழி


இலங்கை காவல்துறை, நாடு முழுவதும் உள்ள காவல்துறை நிலையங்களுக்கு கையடக்கத் தொலைபேசிகள் தொலைந்து போதல் மற்றும் திருடப்படுதல் தொடர்பான முறைப்பாடுகள் நாளாந்தம் பெருமளவில் கிடைத்து வருவதாக தெரிவித்துள்ளது.

இவ்வாறான தொலைபேசிகள் அங்கீகரிக்கப்படாத நபர்களின் கைகளுக்குச் செல்லும் போது, உரிமையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிதி தரவுகள் கடுமையான ஆபத்துக்கு உள்ளாகும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

மேலும், தொலைந்து போன அல்லது திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் சமூக விரோத மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படக்கூடிய அபாயம் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தொலைபேசி காணாமல் போனவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு சேவை வழங்குநரை தொடர்புகொண்டு SIM அட்டையை செயலிழக்கச் செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யும் போது தொலைபேசியின் IMEI (International Mobile Equipment Identity) எண்ணை வழங்குவது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. IMEI எண்ணை அறிய *#06# என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொலைந்த தொலைபேசிகளை கண்டறிவதற்காக I Need Police Portal என்ற இணையதளத்தில் தகவல்களை பதிவு செய்யுமாறும் காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பிறருக்குச் சொந்தமான பொருட்களை தன்னிடம் வைத்திருப்பது இலங்கை தண்டனைச் சட்டத்தின் கீழ் “குற்றவியல் முறைகேடு” (Criminal Misappropriation) எனக் கருதப்படுவதுடன், இதற்காக அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், திருடப்பட்ட தொலைபேசிகளை குறைந்த விலையில் வாங்கி பயன்படுத்துவதும் குற்றமாகக் கருதப்படுவதுடன், அதற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.

இரண்டாம் நிலை (Second-hand) கையடக்கத் தொலைபேசிகளை வாங்கும் போது, அவை திருடப்பட்டவை அல்ல என்பதை “Find Genuine Phone” வசதியின் மூலம் சரிபார்த்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தொலைபேசிகள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்திற்கிடமான வகையில் தொலைபேசிகளை வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடரப்படுவதாகவும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

you may also like