- by Editor
- 1 year ago
மே 26, 27-ல் மீண்டும் கொட்டப்போகிறது கனமழை
-
- by Editor,
- 4 months ago
- in இலங்கை செய்திகள்
எதிர்வரும் மே 26 அல்லது 27 ஆம் திகதிகளில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை நாட்டை வந்தடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், நாட்டின் தென்மேற்கு பிராந்தியங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்றதால் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பதிவாகியிருந்தது. சில இடங்களில் 200 முதல் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்ததால் பிரதான ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஆனால் நேற்று (23) பலத்த மழை இல்லாத காரணத்தால், ஆறுகளின் நீர்மட்டம் தற்போது குறைந்து வழமை நிலைக்குத் திரும்பி வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, களனி கங்கையின் நீர்மட்டம் தற்போது சாதாரண நிலையை எட்டியுள்ளதாக இன்று (24) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், களு கங்கையின் மில்லகந்தை பகுதியில் இன்னும் சிறியளவிலான வெள்ள நிலைமை தொடர்கிறது. குடா கங்கையின் மில்லகந்தை நீர்மானியில் இன்று காலை 8 மணியளவில் 6.51 மீற்றர் நீர்மட்டம் பதிவாகியுள்ளது. நீர்மட்டம் குறைந்து வந்தாலும், அது இன்னும் அபாய மட்டத்திலேயே காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக ஹொரணை – பெல்லபிட்டிய பகுதிகளிலுள்ள தாழ்நிலங்கள் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும், புளத்சிங்கள – களுத்துறை வீதியின் தீயகடுவ பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்திலும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், புட்டுபாவுல மற்றும் எல்லகாவ பகுதிகளில் களு கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்து அவதானிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது.
இதேவேளை, அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் குறைந்துவரும் நிலையிலும், துனுமலே மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தனகலு ஓயா நிரம்பியதால் ஜா-எல, பாரிஸ் பெரேரா மாவத்தை மற்றும் சுதுவெல்ல பகுதிகளில் பல வீடுகள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளன.
கடந்த ஆண்டு ஏற்பட்ட “டித்வா” புயலினால் சேதமடைந்த பாரிஸ் பெரேரா மாவத்தையின் கால்வாய் பக்கச்சுவர் இதுவரை சீரமைக்கப்படாததே தற்போதைய வெள்ளத்திற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும், ஜா-எல ஸ்வர்ணஹங்ஸ பொடி எல பாலம் நேற்று மாலை இடிந்து விழுந்துள்ளதுடன், ஜா-எல – கம்பஹா பிரதான பஸ் வீதியின் யக்கடுவ பகுதியும் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலையால் இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 7,482 குடும்பங்களைச் சேர்ந்த 28,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 491 குடும்பங்களைச் சேர்ந்த 1,731 பேர் 18 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தத்தால் 836 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 2 வீடுகள் முழுமையாக அழிந்துள்ளன.
வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி கசுன் பெஸ்குவல் கருத்து தெரிவிக்கையில், “இன்றும் நாளையும் சாதாரண வானிலை நிலவும். ஆனால் மே 26, 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் தென்மேற்கு பிராந்தியங்களில் மழை சற்றே அதிகரிக்கக்கூடும். அந்த காலப்பகுதியில் தென்மேற்கு பருவமழை முழுமையாக நிலைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவித்தார்.