- by Editor
- 1 year ago
நிலக்கரி பழையதும் புதியதும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை அவசியம்
முன்னைய அரசாங்கங்களின் காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான மற்றும் வெளிப்படையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று (13) அவர் உள்ளிட்ட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விஜயம் செய்து முறைப்பாடொன்றை கையளித்துள்ளனர்.
நிலக்கரிக்கான விலை மனு கோரலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரியே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விலை மனுவை ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவருக்கு வழங்க முயற்சிக்கப்பட்டதாகக் கூறப்படும் குரல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளதாகவும், இதற்கு விரிவான விசாரணை அவசியம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முஜிபுர் ரஹ்மான், 2009ஆம் ஆண்டு முதல் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்க எடுத்துள்ள தீர்மானத்தை வரவேற்றார்.
மேலும், கடந்த கால ஊழல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க மக்களே அரசாங்கத்திற்கு ஆணை வழங்கியுள்ளதாகவும், அதற்குத் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பழைய ஊழல்களை விசாரிக்க ஆணைக்குழுக்கள் தேவையான நிலையில் இருந்தாலும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சமீப வாரங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஜனாதிபதி நேரடியாகவும் உடனடியாகவும் விசாரணை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பழைய விவகாரங்களை மட்டுமே ஆராய்வதின்றி, தற்போது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் வெளிப்படையான விசாரணைகள் நடத்தப்படுவது அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.