Saturday, October 10, 2026

இரகசியம் - பரகசியம் (27.3.2025)


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காகத் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பல நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நாளொரு பேச்சும் பொழுதொரு தகவலுமாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

நேற்று விடயம் தெரிந்த ஒரு அன்பர் அழைப்பு எடுத்தார்.

''வைத்தியர் அர்ச்சுனாவின் சுயேச்சைக் குழுவை சேர்ந்த எல்லா வேட்பு மனுக்களுமே நிராகரிக்கப்பட்டு விட்டன. யாழ். மாநகர சபைக்கு அவரின் சுயேச்சைக் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் அவரால் தங்கமெனச் செல்லமாக அழைக்கப்பட்டு வரும் கௌசல்யா மாத்திரமே ஒப்பமிடவில்லை. அவர் ஒப்பமிடாவிட்டால் வேட்பு மனுவில் அவரது பெயரை ஏற்காமல் நிராகரித்துவிட்டு, அந்த வேட்பு மனுவை ஏற்று இருக்கலாம்தானே? கௌசல்யாவின் பெயர் ஏற்றுக் கொள்ளாமல் விடுபட்டாலும் அந்தப் பட்டியலில் மகளிர் பிரதிநிதித்துவமோ, இளைஞர் பிரதிநிதித்துவமோ குறைய மாட்டாது என்று கூறுகிறார்கள். அப்படி இருக்கையில் அந்த வேட்பு மனுப் பட்டியலில் ஒருவரின் பெயரை நிராகரித்தது விட்டு விட்டு, ஏனையவற்றை ஏற்காமல் விட்டமை சரியா?'' - என்ற சாரப்பட அவர் கேள்வி எழுப்பினார்.

நியாயமான கேள்விதான். ஆயினும் நான் அவருக்கு ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டினேன்.

''இந்த வேட்பு மனுக்கள் யாவும் தனியாக வைத்தியர் அர்ச்சனாவின் சுயேச்சைக் குழுக்கள் என்றாலும் தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்குத் தனித்தனியாகச் சமர்ப்பிக்கப்பட்ட வெவ்வேறு சுயேச்சை குழுக்களின் மனுக்கள்தான். ஒரே அணியின் மனுக்களாக அவற்றை தேர்தல் ஆணையம் அணுகாது. யாழ் மாநகர சபைக்கு கௌசல்யா உட்பட்ட சுயேச்சை குழுவினர் சமர்ப்பித்த வேட்பு மனுவின் தலைமை வேட்பாளர் கௌசல்யாதான். அவருடைய வேட்பு மனு ஏற்கப்படாமல் விட்டால் அவர் தலைமை தாங்கும் வேட்பு மனு நிராகரிக்கப்படும். தலைவர் இல்லாத சுயேச்சைக் குழுவின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாதல்லவா?'' - என்று நான் விளக்கமளித்தேன். அவர் ஒப்புக்கொண்டார்.

வைத்தியர் அர்ஜுனாவுக்கும் அவரது செல்லத் தங்கத்துக்கும் இடையே இப்போது முரண்பாடு என்று பேச்சு அடிபடுகின்றது. உண்மையாகவும் இருக்கலாம். அது ஊடலாகவும் இருக்கலாம். பின்னர் கூடலாவதற்கும் வாய்ப்பு இல்லாமலில்லை.

ஆயினும், வைத்தியர் அர்ச்சுனா உரிய முறையில் தமது அரசு சேவையில் இருந்து விடுப்பு பெறாமல் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டமை தவறானது என்று வழக்கு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அது விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு நிலுவையில் உள்ளது.

அந்த வழக்கின் விசாரணை பூர்த்தியானால் வைத்தியரின் செல்லத் தங்கம் வைத்தியரின் இடத்துக்கு நாடாளுமன்றத்துக்கு செல்லக்கூடிய வாய்ப்பு இருப்பதையும் மறுத்து விட முடியாது.

+++++++++++++++++++++++++++++

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக சமர்ப்பித்த வேட்பு மனுக்களில் யாழ் மாவட்டத்தில் ஒன்பதும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒன்றும், வன்னி மாவட்டத்தில் ஒன்றுமாக மொத்தம் 11 சுயேச்சை மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. இவை தொடர்பில் வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டன என சங்குக் கூட்டணியின் சார்பில் கொழும்பில் இவ்விடயங்களைக் கையாளும் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். எனினும், கொழும்பு நீதிமன்ற செய்திகளில் இருந்து அதனை நேற்று மாலை வரை உறுதிப்படுத்த முடியவில்லை.

சங்கு கூட்டணியின் சார்பில் இவ்விடயங்களை ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கையாளுகின்றார் எனக் கூறப்பட்டது. அவரிடம் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் நேற்று புதன்கிழமை உயர்நீதிமன்றத்தில் எத்தனை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன என்று கேட்கப்பட்ட போது அது பற்றிய விவரத்தை நாளைதான் (அதாவது இன்றுதான்) தெரிவிக்க முடியும் என அவர் நேற்றுக் கூறியுள்ளார்.

பல தரப்புகளுக்கும் வழக்குகளை தாக்கல் செய்வதற்கு பெரும் நிதி நெருக்கடி இருப்பதாக கூறப்படுகிறது. கொழும்பில் வழக்கு என்று வந்து விட்டாலே கட்சியை விற்றுப் பணம் செலவழிக்க வேண்டும் என்று சில வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

தமிழ் மக்கள் கூட்டணி கூட நீதிமன்ற செலவினங்களை அறிந்து, மலைத்து, அதன் காரணமாக யாழ் மாநகர சபை வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக மட்டும் வழக்குத் தாக்கல் செய்வதோடு தனது வழக்குத் திட்டத்தை ச்சுருக்கி கொண்டு விட்டதாக அறிய வருகிறது.

இந்த விடயத்தில் வழக்கு விவகாரங்கள் நீண்ட பல தசாப்தங்களாகவே களைக்காமல், அலையாமல், நிதிச் செலவினம் குறித்து அலட்டிக் கொள்ளாமல், துணிந்து ஈடுபடும் தமிழர் தரப்பு தமிழரசுக் கட்சிதான்.

அண்மைக் காலத்தில் தமிழரசு கட்சி வைத்த - எதிர்கொண்ட - வழக்குகள் ஏராளம். ஆனாலும் அக்கட்சி நிதி பிரச்சினைக்காக வழக்கு விடயத்தில் துவண்டு போக சந்தர்ப்பமே ஏற்படவில்லை. ஆளுமை மிக்க ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் கட்சியின் வசம் இருப்பது இவ்விடத்தில் ஒரு 'பிளஸ் பொயிண்ட்'தான்....!

you may also like