Thursday, October 8, 2026

மண்சரிவு குறித்து சிவப்பு எச்சரிக்கை உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்


நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நேற்று இரவு 8.30 மணி நிலவரப்படி நான்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் 'சிவப்பு நிற' (நிலை 3) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமையே இந்த எச்சரிக்கைக்குக் காரணமாகும்.

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்:

கண்டி மாவட்டம்: யட்டிநுவர, தொலுவ, உடுதும்பர மற்றும் கங்கா இஹல கோரளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்.

கேகாலை மாவட்டம்: யட்டியாந்தோட்டை, கேகாலை, தெஹியோவிட்ட, அரநாயக்க மற்றும் மாவனல்லை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்.

மாத்தளை மாவட்டம்: ரத்தோட்டை, அம்பன்கங்க கோரளை, லக்கல பல்லேகம, வில்கமுவ மற்றும் உக்குவெல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்.

இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள்.

இதேவேளை, பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறும், உள்ளூர் அதிகாரிகளினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் ஏதேனும் அவசர நிலையின் போது காவல்துறை மற்றும் கிராம உத்தியோகத்தர்களின் உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

you may also like