Thursday, October 8, 2026

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு கட்டுப்பணம் கூட கிடைக்கக் கூடாது: முதல்வர் ஸ்டாலின் உரை


பா.ஜ.கவும் அ.தி.முகவும் வெளிப்படையான கூட்டணியாக வந்தாலும் சரி, மறைமுகக் கூட்டணியாக வந்தாலும் தமிழகத்தில் எந்த தொகுதியிலும் அவர்களுக்கு கட்டுப்பணம் கூட கிடைக்கக் கூடாது என்று திருவள்ளூரில் இடம்பெற்ற தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திருவள்ளூரில் நடைபெற்ற சென்னை மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உடல்நிலை காரணமாகக் காணொலி மூலமாக தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

முதல்வர் ஸ்டாலினின் உரையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படித்தார். அதில், திடீரென்று காய்ச்சலும் தொண்டை வலியும் எனக்கு ஏற்பட்டுவிட்ட காரணத்தால் இந்த நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்து உங்களை எல்லாம் சந்தித்து உரையாற்றாமல் போனதற்காக நான் முதலில் என்னுடைய வருத்தத்தை மிகுந்த பணிவோடு உங்களுக்கெல்லாம் தெரிவித்துக் கொள்கிறேன். அதிகம் பேசக்கூடாது என்று மருத்துவர்கள் கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். அதை எல்லாம் மீறி இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறேன்.

தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையில் பார்த்துப் பார்த்து திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். இதனால் மக்கள் நம் ஆட்சி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் என நமது திராவிட மாதிரி அரசின் எல்லாத் திட்டங்களையும் நான் விளக்கமாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவையெல்லாம் உங்களுக்கே நன்றாகத் தெரியும். இதே மாதிரியான சாதனைகள் மத்திய அளவிலும் நிகழ்த்தப்பட வேண்டும் என்றுதான் இண்டியா கூட்டணியை நாம் உருவாக்கியிருக்கிறோம். இண்டியா கூட்டணியின் வெற்றிக்காக நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்னவென்றால், நாம் செய்த, செய்கிற சாதனைகளை மட்டும் சொல்லாமல், பா.ஜ.கவின் உண்மை முகத்தை வெளிப்படுத்த வேண்டும்.

தமிழகத்துக்காக எந்தச் சிறப்புத் திட்டத்தையும் கொண்டு வராமல் தமிழகத்தை மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது. பா.ஜ.கவின் இந்தத் துரோகத்தையும் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். பா.ஜ.கவின் கைப்பாவையாக அத்தனை துரோகத்துக்கும் சுயநலத்துடன் துணை நின்றது, அடிமை அ.தி.மு.க. இன்றைக்குப் பிரிந்தது போல நாடகம் நடத்தும் இந்த கும்பலின் துரோகங்களைப் பட்டியல் போட்டு மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்.

தி.மு.கவும் இண்டியா கூட்டணியும் பா.ஜ.கவின் மக்கள் விரோதத் தன்மையை அம்பலப்படுத்துகிறது என்றுதான், எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது பா.ஜ.க. அதனால்தான், வருமான வரித்துறை சோதனை எல்லாம் நடைபெறுகிறது.

கொள்கை என்று எதுவுமே இல்லாமல், ஊழல் மட்டுமே அச்சாணி என்று ஆட்சியில் இருந்து தமிழகத்தை நாசப்படுத்திய அ.தி.மு.கவும் தமிழகத்தின் எல்லா உரிமைகளையும் பறித்து தமிழ்நாடு என்ற அடையாளத்தையே சிதைக்க நினைக்கும் பா.ஜ.கவும் சுயநலத்தின் காரணமாக இந்த இரு கட்சிகளுக்கும் துணை போகும் அதன் கூட்டணிக் கட்சிகளும், வெளிப்படையான கூட்டணியாக வந்தாலும் சரி, மறைமுகக் கூட்டணியாக வந்தாலும் சரி, தமிழகத்தில் எந்த தொகுதியிலும் அவர்களுக்கு கட்டுப்பணம் கூட கிடைக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். 

you may also like