Wednesday, October 7, 2026

அரியநேத்திரனைத் தமிழ் மக்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை: சுமந்திரன் எம்.பி. கூறுகின்றார்


''நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அரியநேத்திரன் தமிழ் மக்களால் ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை என்பது நிரூபணமாகியிருக்கின்றது.''

- இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.தெரிவித்திருக்கிறார்.

'ஜனாதிபதித் தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்' என்ற தலைப்பில் தாம் நேற்று வெளியிட். அறிக்கை ஒன்றிலே அவர் இப்படித் தெரிவித்திருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பவை வருமாறு:-

"எமது கோரிக்கைக்கு அமைவாக வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் வாக்களித்ததன் காரணமாக ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் திரு. சஜித் பிரேமதாஸ் வெற்றி பெற்றிருக்கின்றார். வடக்கு, கிழக்கிலே அண்ணளவாக 80 வீதத்தினர் நாம் அடையாளம் கண்ட மூன்றுபிரதான வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். இதுஎமது கட்சி எடுத்த நிலைப்பாட்டிற்கான மாபெரும் அங்கீகாரம். மாறாக, அரியநேத்திரனுக்கு வடக்குகிழக்கில் 14 வீதத்திற்கும் குறைவாகவே வாக்குகள் கிடைத்துள்ளன. மிகக் குறைவான அளவு வாக்குகளைப்பெற்றதன் மூலமும், பிரதான தமிழ்க் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆதரவு மறுக்கப்பட்ட நிலையிலும், அரியநேத்திரனின் படுதோல்வி தமிழ் மக்களின் தோல்வியாக சித்தரிக்கப்படுவதிலிருந்து தப்பியிருக்கின்றது.

1982 ஆம் ஆண்டு குமார் பொன்னம்பலம் மொத்த வாக்குகளில் 2.67 வீத வாக்குகளைப் பெற்றிருந்தார். வெறும் 1.69 வீத வாக்குகளையே பெற்றதன் மூலம் அரியநேத்திரன் தமிழ் மக்களால் ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை என்பது நிரூபணமாகியிருக்கின்றது.

இந்தத் தடவை மக்களது மதி நுட்பத்தால் இந்தப் பெரும் அபாயத்திலிருந்து நாம் தப்பித்துக்கொண்டுள்ளோம். இனிமேலும் இவ்விதமான விபரீத விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டாம் என்று தமிழ்ப் பொதுக் கட்டமைப்பினர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோரிடம் விநயமாகக் கேட்டுக்கொள்கின்றேன். - என்று உள்ளது. 

you may also like