- by Editor
- 2 years ago
இரகசியம் - பரகசியம் (09.12.2023)
இந்திய இராஜதந்திர மட்டத்துடன் தொடர்புடைய ஒருவரை சில தினங்களுக்கு முன்னர் சந்தித்தேன். அவர் ஓர் உபதேசம் செய்தார்.
வழமையாக இந்திய வெளியுறவு அமைச்சரில் இருந்து இந்தியத் தூதரக அதிகாரிகள் வரை நமது தமிழ்த் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளைச் சந்திக்கும்போது செய்யும் உபதேசம்தான்.
''தமிழ்த் தலைவர்கள் பிளவுபட்டிருப்பது கூடாது. நீங்கள் ஒன்றுபட்டு நின்றால்தான் நீங்கள் கொழும்புடன் பேரம் பேசலாம். நாங்களும் (இந்தியாவும்) உங்களுக்காகக் கொழும்புக்கு ஏதேனும் அழுத்தம் கொடுத்து செய்விக்கலாம்'' - என்ற சாரபட்ட பல்லவியை ஆரம்பித்தார்.
எனக்குப் புண்ணில் புளி தேய்த்த மாதிரி சீற்றம் பொங்கிக் கொண்டு வந்தது. நான் எரிந்து விழுந்தேன். ''இந்த உபதேசத்தை நிற்பாட்டுங்கள். ஈழத் தமிழருக்குத் தீர்வு என்று நீங்கள் ஒரு தலைப்பட்சமாக இலங்கையுடன் ஒப்பந்தம் செய்தபோது எங்கள் ஒற்றுமை குறித்து நீங்கள் கவனிக்கவில்லை. அப்போது ஈழத்தமிழர்கள், இயக்கங்களாகப் பிரிந்து நின்று, இராணுவ ரீதியில் தங்களுக்குள் மோதிக் கொண்டும் இருந்தார்கள். மிதவாதக் கட்சியாகச் செயற்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியை கூட இயக்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படிப் பல துண்டுகளாக இராணுவ ரீதியிலும், கருத்தியல் ரீதியிலும் நாங்கள் பிளவு பட்டு நிற்பதை பயன்படுத்தித்தான் நீங்கள் இடையில் புகுந்து விளையாடினீர்கள். எங்கள் சம்மதமின்றி அழுத்தம் போட்டு கொழும்புடன் ஒப்பந்தம் செய்தீர்கள். அந்த அழுத்தத்துக்கு விடுதலைப் புலிகள் கூட ஆரம்பத்தில் அடிபணிந்தார்கள்.
தமிழர்களாகிய எங்கள் மீது மட்டுமல்ல, சிங்கள அரசின் மீதும் கடும் அழுத்தம் போட்டுத்தான் ஒப்பந்தத்தைச் செய்தீர்கள். அந்த ஒப்பந்த வாசகத்தை நடைமுறையாக்கும் செய்வதற்காக தமிழர் தரப்பு மீது நீங்கள் யுத்தம் கூடத் தொடுத்தீர்கள். இவ்வளவையும் செய்த நீங்கள், இப்போது ஒப்பந்த வாசகங்களை நடைமுறையாக்கம் செய்வதற்குத் தமிழ் தலைவர்கள் தங்களுக்குள் பிரிந்து நிற்பதுதான் காரணம், இடையூறு என்பது போல தத்துவம் பேசுவது 'டூ மச்'. அது உங்களின் பொறுப்பு. அப்படி பார்த்தால் கூட, தமிழ் தலைமைகள், நீங்கள் இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் வாசகங்களை ஒட்டிய அம்சத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக மிக ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். உங்கள் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை உள்ளடக்கிய 13 ஆவது திருத்தம் தீர்வுக்கான ஆரம்பப்படி, அது முழுமையாக நடைமுறையாக்கம் செய்யப்பட வேண்டும் என்பதில் தமிழ் தரப்பில் இரண்டு கருத்துக்கு இடமே இல்லை.
ஆகவே இனி மேலும் ஈழத் தமிழ் தலைவர்கள் ஒற்றுமைப்பட்டால்தான் உங்களால் உரியதைக் கொழும்பிடமிருந்து பெற்றுத் தர முடியும் என்று லாயக்கற்ற கதையை அவிழ்த்து விடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்கள் இயலாமையை - கொழும்பு மீது உரிய அழுத்தம் தர முடியாத உங்களின் இராஜதந்திர செல்வாக்கு வறுமையின் உண்மை நிலையை மூடி மறைக்க ஈழத் தமிழ் தலைவர்களின் ஒற்றுமையின்மை என்ற திரைச்சீலையை நாடாதீர்கள்!'' - என்று செமத்தியாகக் கொடுத்தேன்.
தலையாட்டி நான் சொல்வதை செவிமடுப்பதைத் தவிர, அவருக்கு வேறு வழி இருக்கவில்லை. எனக்கு பதில் கொடுத்து விளங்கப்படுத்துவதில் அர்த்தமில்லை என்று நினைத்தாரோ தெரியவில்லை.
எது, எப்படி என்றாலும் என் கருத்து நிலைப்பாடு உரிய வட்டாரங்களுக்கு, உரிய முறையில் எட்டும் என்ற திருப்தியுடன் உரையாடலை நான் முடித்துக் கொண்டேன்.
நான் கூறியவை சரிதானே வாசகர்களே...?