Wednesday, October 7, 2026

இரகசியம் - பரகசியம் (05.11.2024)


உலகளாவிய ரீதியில் நாடுகளின் பொருளாதார சுதந்திரம் தொடர்பான சுட்டெண்ணில் இலங்கையின் நிலைமை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து 184 நாடுகளில் 149 இடத்துக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் 184 நாடுகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் இலங்கையின் தரப்படுத்தல் அண்மைய வருடங்களில் நிலையான வீழ்ச்சியைக் கண்டுள்ளது எனச் சுட்டப்படுகின்றது.

பாரம்பரிய அறக்கட்டளை அமைப்பு மேற்கொள்ளும் வருடாந்த பொருளாதார சுதந்திர சுட்டெண்ணிலேயே இலங்கையின் வீழ்ச்சி நிலைமை மேலும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.

2016 இல், இலங்கை பொருளாதார சுதந்திரத்தில் உலகளவில் 95 ஆவது இடத்தில் இருந்தது. 2020 ஆம் ஆண்டில், அது 117ஆவது இடத்திற்கும், பின்னர் 2023 இல் 136ஆவது இடத்திற்கும், மிக சமீபத்தில், 2024 இல் 149 வது இடத்திற்கும் சரிந்துள்ளது.

நாட்டில் சட்டத்தின் ஆட்சி, அரசாங்க செயல்திறன், ஒழுங்குமுறை செயல்திறன் மற்றும் சந்தை திறந்த தன்மை போன்ற பன்னிரண்டு விதமான அளவுகோல்களைப் பயன்படுத்தி இந்தக் குறியீடு ஆண்டுதோறும் நாடுகளை மதிப்பிடுகிறது.

ஆசிய - பசிபிக் பிராந்தியத்திற்குள், இலங்கை இப்போது 39 நாடுகளில் 34 ஆவது இடத்தில் உள்ளது. இது இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் போன்ற பிராந்திய சகாக்களுடன் ஒப்பிடும்போது இலங்கை குறைந்த அளவிலான பொருளாதார சுதந்திரத்தையே கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. பொருளாதார சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக மட்டுமன்றி தீவிரமாக கட்டுப்படுத்தப்பட்ட நாடாகவும் இலங்கையை அந்த அறிக்கை வகைப்படுத்துகிறது.

இதுதான் இலங்கையின் இன்றைய மிக மோசமான நிலைமை!

***

'தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பது' என்பார்கள். அத்தகைய வேலையை ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவின் அரசு செய்வதாக தேசிய மக்கள் சக்தியின் பிரமுகர் சரித்த ஹேரத் கூறியிருக்கிறார்.

அண்மையில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க சில ஊடகங்களை காட்டமாக தாக்கி விமர்சித்திருந்தார்.

அந்த நடவடிக்கையையே தீட்டிய மரத்தில் கூர் பார்க்கும் வேலை என்ற சாரப்பட விமர்சித்திருக்கின்றார் சரித்த ஹேரத்.

ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவின் அரசு, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தித்தான் அதிகாரத்தை பிடித்தது. இப்போது அதே ஊடகங்களை இலக்கு வைத்து ஜனாதிபதி கரித்து கொட்டுகின்றார் என்று விசனத்துடன் சுட்டிக்காட்டி இருக்கிறார் சரித்த ஹேரத். 

you may also like