Friday, October 9, 2026

இரகசியம் - பரகசியம் (07.03.2024)


அரசியல்வாதிகளுக்குத் தொல்லை பெரும்பாலும் அவர்களின் அல்லக்கைகளினால்தான். அப்படிப்பட்ட ஒரு தகவல் இன்று.

தமிழரசுக் கட்சியின் தலைவர் தேர்தலில் சிறீதரன் வெற்றி பெற்றார் என்ற நிலையில் விவகாரம் நீதிமன்றுக்குப் போனது.

தலைவர் தேர்வு உட்பட யாவுமே கட்சியின் யாப்பு விதிகளுக்கு அமைய நடைபெறவில்லை என்ற உண்மையை திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கின் முதல் தவணையின் போதே சிறீதரன் உட்பட்ட கட்சி நிர்வாகிகள் ஒப்புக்கொள்ளப் போக, விடயம் அவரின் ஆதரவாளர்களுக்கு உறைப்பாகச் சுட்டிருக்கின்றது.

தலைவர் தெரிவு இடம்பெற்ற பொதுக்குழுக் கூட்டமும் யாப்பு விதிகளுக்கு அமைவானது அல்ல என்பதை சிறீதரனே ஒப்புக்கொண்டால், தமது தலைவர் தெரிவைத் தாமே சரியான தெரிவு அல்ல என்பதை அவர் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொண்டதாகிவிட்டது எனும் உண்மை அல்லக்கைகளை நன்கு சுட்டிருக்கும் போல.

உடனே கட்சி நிர்வாகிகள் நீதிமன்றத்தில் பதிந்த அந்த நிலைப்பாட்டை தமக்கேற்ப அர்த்தம் பண்ணி, வியாக்கியானம் செய்து, முகநூல் பக்கங்களிலும் சமூக ஊடகங்களிலும் பெரும் சண்டப்பிரசண்டமான அறிவிப்புக்களாக அவர்கள் விடுத்தனர்.

அன்று வழக்கு விசாரணை முடிந்து சிறீதரன் தரப்பு நீதிமன்றத்தை விட்டு வெளியே வர முன்னரே, கட்சி நலனுக்காகத் தமது தலைவர் பதவியை துறந்தார் சிறீதரன் என்று, தமது தலைவரைப் பெரும் தியாகியாக்கி அறிவிப்புக்கு மேல் அறிவிப்பு விடுத்தனர் அல்லக்கைகள்.

ஆக, கட்சியின் செயற்பாடுகள், பொதுக்குழுக் கூட்டங்கள், மத்திய குழுக் கூட்டங்கள் என்பன கட்சி யாப்புக்கு அமைய நடக்கவில்லை என்ற உண்மையை சிறீதரன் உட்பட்ட கட்சி நிர்வாகிகள் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு பதிந்தமையை ஒட்டித்தான் 'தலைவர் பதவி ராஜினாமா!' என்ற அலப்பறை அறிவிப்புகள் அவரின் அல்லக்கைகளால் முன்னெடுக்கப்பட்டன.

ஆயினும், கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் கட்சியின் யாப்பின்படி நடக்கவில்லை என்ற உண்மையை ஒப்புக் கொள்வதன் மூலம் தான் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பொதுக்குழுக் கூட்டமும் முறையானது அல்ல என்பதை சிறீதரன் ஏற்கின்றார் எனும் உண்மையை அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோடி காட்டி இருந்தார் என்பது மறுப்பதற்கில்லை.

அதன் அர்த்தம் பதவியைத் துறக்கும் ராஜினாமாவா அல்லது கட்சிக்கான தியாகமா என்பவை எல்லாம் எனக்குத் தெரியவில்லை.

இனி விடயத்துக்கு வருவோம்.

இந்த அல்லக்கைகளின் செய்திகளைப் பார்த்துவிட்டு சில சிங்கள ஊடகங்கள் 'தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியை சிறீதரன் ராஜினாமா செய்து விட்டார்' என்று செய்தி வெளியிட்டு இருக்கும் போலும்.

சிறீதரனை நாடாளுமன்றத்தில் கண்ட பலரே அப்படி நேரடியாக அவரிடம் கேட்டிருக்கின்றனர். அவ்வாறு நேரில் சிறீதரனிடமே கேட்டவர்களில் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ என்று தெரிகின்றது.

நேற்று பகல் சஜித் பிறிதொரு தமிழ் எம்.பியைச் சந்தித்து இது பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார்.

''சிறீதரனிடம் அவர் கட்சித் தலைமைக்குத் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அவர் அந்தத் தலைவர் பதவியை ராஜினாமாச் செய்து விட்டார் என்று செய்திகள் வெளியாகின்றனவே , உண்மையா? என்று கேட்டேன். அவர் தமக்குத் தெரிந்த விதத்தில் இல்லை என்று கூறிவிட்டுப் போகின்றார். எது உண்மை? அந்த செய்தியா? அல்லது சிறீதரன் கூறுவதா?'' - என்று கேட்டிருக்கின்றார் சஜித்.

''அவரிடம்தான் (சிறீதரனிடம்தான்) கேளுங்கள். அவர்களின் கட்சியின் தலைவர் அவரா அல்லது வேறு யாருமா என்பது அவருக்கே தெளிவாகத் தெரியுமோ என்னவோ..? அதற்கு நான் எப்படிப் பதில் கூறுவது? ஆனால், அவர்தான் கட்சித் தலைவர் என்று சற்று முன்னரும் சுமந்திரன்தான் கூறித் திரிகிறார்'' - என்று சஜித்துக்குப் பதிலளித்திருக்கின்றார் அந்தத் தமிழ் எம்.பி.

அப்படிச் சுமந்திரன் கூறினாரா என்பது எனக்குத் தெரியவில்லை.

இதற்கிடையில் -

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு நெருக்கமான ஒருவர் நாடாளுமன்றத்தில் இருந்து எனக்கு நேற்றுப் பிற்பகலில் தொலைபேசி அழைப்பு எடுத்தார். அவரும் ''சிறீதரன், தமிழரசுத் தலைவர் பதவியை ராஜினாமாச் செய்து விட்டாராமே? உண்மையா?'' - என்று கேட்டார். நான் விடயத்தை விளங்கப்படுத்தினேன்.

''ஓ..! அப்படியா? இந்த ஊடகங்கள் செய்கின்ற வேலை பெரும் குழப்பம்'' - என்று அலுத்துக் கொண்டார் அவர்.

நான் குறுக்கிட்டேன்.

''இல்லை... இல்லை... அல்லக்கைகள் செய்கின்ற குழப்பம் இது!'' - என்றேன் நான்.

''ஓம்..ஓம்.. எனக்கும் புரிகிறது. நான் அந்தச் செய்தியை முதலில் நம்பவில்லை. சற்று முன்னர் நாடாளுமன்றக் கன்ரீனில் சிறீதரன், சுமந்திரன், சார்ல்ஸ் நிர்மலநாதன் மூவரும் ஒரே மேசையிலிருந்து சாப்பிட்டுக் கொண்டு, மிகவும் அன்னியோன்னியமாக உரையாடிக் கொண்டிருக்கின்றமையைக் கண்டேன். பக்கத்து மேசையில் சித்தார்த்தனுடன் மற்றைய இரண்டு தமிழ் எம்.பிக்கள் இருந்தனர். சாப்பிட்டு முடிந்த பின்னர் சுமந்திரன் எழுந்து வந்து சித்தார்த்தனின் மேசையில் இருந்தும் உரையாடினார். அவற்றைப் பார்க்கும்போது சிறீதரன் பதவியை ராஜினாமாச் செய்த தகவல் இட்டுக்கட்டப்பட்டதாக இருக்கும் என்று நினைத்தேன்'' - என்றார் அவர்.

''அப்படி கருதாதீர்கள். ஒரு மேசையிலிருந்து சாப்பிட்டபடி, ஒருவர் காலை மற்றவர் இழுத்து விழுத்தும் தமிழ் நண்டுகள் - அதுவும் யாழ்ப்பாணத்து நண்டுகள் - நாங்கள்'' என்றேன் நான்.

என் கருத்து விளங்காமலேயே அவர் 'ஆஹா..!' என்று சிரித்தார். நானும் பதிலுக்குத் தொலைபேசியில் சிரித்து வைத்தேன்.

அந்தத் தென்னிலங்கை நண்பருக்கு நண்டுக் கதை தெரியாவிட்டாலும்... வாசக நண்பர்களே, உங்களுக்குத் தெரியும்தானே...!

you may also like