- by Editor
- 1 year ago
பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் நியமனம்!
-
- by Editor,
- 2 years ago
- in உலக செய்திகள்
பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கின் உத்தரவின் பேரில் இவர் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டேவிட் கெமரூன் 2010 முதல் 2016 வரை பிரித்தானிய பிரதமராக பதவி வகித்துள்ளார்.
கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பின்னர் முக்கிய பொறுப்புக்கு கெமரூனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கெமரூனின் திடீர் நியமனம் அரசியல் பார்வையாளர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, பிரித்தானிய உள்துறை அமைச்சர் சுயாலா பிரேவர்மேன் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் உள்துறை அமைச்சராக இருந்து வந்த அவரை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அண்மையில் நடந்த பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதை பொலிஸார் தவறிவிட்டனர் என விமர்சித்ததால் சுயாலா பிரேவர்மேன் சர்ச்சையில் சிக்கினார். அவரை பதவி நீக்கம் செய்ய பிரதமர் ரிஷி சுனக்குக்கு கடுமையான அழுத்தங்கள் இருந்த நிலையில், நேற்று அமைச்சரவை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக சுயலா நீக்கப்பட்டுள்ளார்.
சுயாலா பிரேவர் மேன் கன்சர்வேடிவ் கட்சியில் நன்கு அறியப்பட்டவராகவே இருந்தார். ஆனால், அவரது விமர்சனத்துக்குப் பிறகு உட்கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்பு எழுந்தது. பொலிஸார் இரட்டை வேடம் போடுகின்றனர் என அவர் விமர்சித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக ஜேம்ஸ் க்ளெவர்லி உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் லண்டனில் இடம்பெற்ற பாலஸ்தீன ஆதரவு பேரணிகளை பொலிஸார் சரிவர கட்டுப்படுத்தவில்லை என்று கூறிய சுயாலா பிரேவர்மேன் அந்தப் பேரணிகளை வெறுப்புப் பேரணிகள் என்றும் கூறியிருந்தார்.
இது பிரித்தானிய அரசியலில் சர்ச்சையைக் கிளப்பியது. நேற்று முன்தினம் லண்டனில் வலதுசாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுயலா பிரேவர்மேன் பேச்சால் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.