- by Editor
- 2 years ago
தமிழரசுக் கட்சியின் சஜித்துக்கான ஆதரவு சொல்லும் செய்தி!
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
- புருஜோத்தமன் தங்கமயில் -
எதிர்பார்க்கப்பட்டது மாதிரியே, ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துவிட்டது. வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் மத்திய குழு, இந்த முடிவை எடுத்தது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற அடையாளத்தோடு ஒருவரை நிறுத்துவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்ட தருணம் முதல், அந்த முயற்சிகளுக்கு எதிராக தமிழரசுக் கட்சியின் மத்திய குழு இருந்தது. இறுதியாக நடைபெற்ற நான்கு, ஐந்து மத்திய குழுக் கூட்டங்களில், பெரும்பான்மையான உறுப்பினர்கள், பொது வேட்பாளர் என்ற விடயத்தை பலமாக விமர்சித்தார்கள். ஒருசிலர் மாத்திரமே, அதற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்தார்கள். அவர்களும்கூட அதற்காக மத்திய குழுவுக்குள் வாதிடும் நிலையில் இருக்கவில்லை. மாறாக, தங்களின் நிலைப்பாட்டினை கூட்ட அறிக்கையில் பதிவு செய்வதோடு ஒதுங்கிவிடும் நிலையிலேயே இருந்தார்கள். ஆரம்பம் முதலே, தமிழரசுக் கட்சியின் மத்திய குழு, பிரதான வேட்பாளர்களில் ஒருவரை ஆதரிக்கும் என்பது அப்பட்டமாக தெரிந்தது. அதற்கான பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் தீர்மானங்களை எடுத்தது. அதன்போக்கில், இறுதியாக நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்தில், சஜித்தை ஆதரிப்பதாக தீர்மானத்தை எடுத்து அறிவித்திருக்கின்றது.
தமிழரசுக் கட்சியின் இறுதி மத்திய குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா சுகயீனம் காரணமாக கலந்து கொள்ளவில்லை. கட்சியின் புதிய தலைவராக தேர்வாகி நீதிமன்ற உத்தரவுகளினால் பதவியேற்காத சிவஞானம் சிறீதரன், பிரித்தானியாவிலுள்ள பிள்ளையார் கோயிலொன்றின் தேர்த் திருவிழாவில் பங்கேற்பதால், மத்திய குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கவில்லை. அதனை அவர், கட்சியின் பதில் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்கவும் செய்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் உள்ளிட்ட சிலர் தனிப்பட்ட காரணங்களினால் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்று கட்சிக்கு அறிவித்திருக்கிறார்கள். தமிழரசுக் கட்சியின் நிறுவனரான தந்தை செல்வா, கட்சிக்கான யாப்பினை வரையும் போது, ஒருபோதும் தமிழரசுக் கட்சி எந்தவொரு குடும்பத்தினதும் தனிச்சொத்தாக மாறிவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டார். அந்தப் படிப்பினையை அவருக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸும், ஜீ.ஜீ.பொன்னம்பலமும் வழங்கியிருக்கலாம். அதனால், தமிழரசுக் கட்சியின் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை மத்திய குழுவுக்கு வழங்கி யாப்பை வரைந்தார். மத்திய குழுவின் 11 உறுப்பினர்கள் கலந்து கொண்டால்
, அந்தக் கூட்டம் அங்கீகாரம் பெற்றது. அதாவது, மத்திய குழுக் கூட்டத்தை கூட்டினால், குறைந்தது 11 உறுப்பினர்கள் கலந்து கொண்டால் மாத்திரமே, அந்தக் கூட்டம் முடிவுகளை எடுக்கும் அதிகாரமுள்ள கூட்டமாக அங்கீகாரம் பெறும். இறுதியாக நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்தில், 29 மத்திய குழு உறுப்பினர்கள் பங்கேற்று, தீர்மானத்தை எடுத்திருக்கிறார்கள்.
சஜித்தை ஆதரிப்பதாக மத்திய குழு தீர்மானத்தை எடுத்து அறிவித்தும், அதற்கு எதிராக மாவை ‘கலகக்குரல்’ எழுப்பினார். தனக்குத் தெரியாமல், தீர்மானத்தை எடுக்க முடியாது என்று ஊடகமொன்றிடம் கூறினார். ஆனால், அந்தக் கலகக்குரலை 15 மணி நேரங்களிலேயே கைவிட்டு, ‘மத்திய குழுவின் தீர்மானத்தை அனைவரும் இணைந்து செயற்படுத்துவோம்’ என்று கூறிவிட்டு அமைதியாகிவிட்டார். அந்த மாற்றத்தை அவரில் விதைத்தது யார், என்ற கேள்வி எழுகின்றது. அவரின் மாற்றத்துக்கு அக – புற – அயலக அழுத்தங்கள் காரணமாக இருக்கலாம். அகம் என்பதற்கு ‘வீடு’ என்றும் பொருள் உண்டு. அந்த வீடு அவரின் சொந்த வீட்டுக்குள் இருந்து விடுக்கப்பட்ட அழுத்தமா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏனெனில், மாவையின் மகன் ஒருவர், சஜித்தோடு நிற்கும் படத்தினை இணையப் பத்திரிகையொன்று வெளியிட்டு, சஜித்தை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் தீர்மானத்துக்குப் பின்னால், தாங்கள் இருப்பது மாதிரியாக உரிமை கோரல்களை செய்திருந்தது. தமிழரசுக் கட்சியின் சின்னம் வீடு(அகம்). அதன் யாப்பு விதிகளை மாவை எடுத்து நோக்கி (அல்லது யாராவது எடுத்துக் கூறி) விளக்கியதும், தன்னுடைய கலகக்குரல் எடுபடாது என்றும் அதனைக் கைவிட்டாரோ தெரியாது.
தமிழரசுக் கட்சி இன்னமும் எந்தவொரு குடும்பத்தினதும் தனிச் சொத்தாக மாறாமல் இருப்பதற்கும் – வாழ்நாள் தலைவர்களை பிரசவிக்காமல் இருப்பதற்கும் - கட்சியின் யாப்புதான் அடிப்படை. அதன் முன்னால், அனைவரும் சமமானவர்கள். மத்திய குழு என்று வந்துவிட்டால், அதற்குள் தலைவருக்கும், நாடாளுமன்ற உறுப்பினருக்கும் கூட இன்னொரு மத்திய குழு உறுப்பினருக்கான அதிகாரம்தான். அந்த மத்திய குழுக் கூட்டத்தில், எது பெரும்பான்மைத் தீர்மானமோ, அதுதான் கட்சியின் முடிவு. அதுபோக, ஜனநாயகக் கட்சியாக இருப்பதனால், தமிழரசுக் கட்சிக்குள் அடிக்கடி கலகக்குரல்கள் எழுவதுண்டு. அதனை எழுப்பியவர்கள், கட்சிக்குள் தொடர்ந்தும் நீடிப்பதுமுண்டு. இப்போது, தலைவர் கலகக்குரல் எழுப்பினார். அவ்வளவுதான். இன்னொரு பக்கம், தமிழரசுக் கட்சியின் சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்துக்கு எதிராக தமிழ்ப் பொது வேட்பாளர் ஆதரவுக் குழுவினரே பொங்கினார்கள். முதல் நாளில், தீர்மானத்துக்கு எதிராக பேசிய மாவையை, ‘மாவீரன்’ என்ற வர்ணித்து எழுதினார்கள். ஆனால், அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டதும், மாவை மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தி தங்களின் கோபங்களை வெளிப்படுத்தினார்கள்.
தமிழரசுக் கட்சிதான் இன்னமும் தமிழ்த் தேசிய அரசியலில் முதன்மைக் கட்சி. எப்போதுமே அந்த இடத்தினை அந்தக் கட்சி இழக்க விரும்பாது. அப்படியான நிலையில், அந்தக் கட்சிக்கென்று பொறுப்பு அதிகம். தென் இலங்கையில் யார் ஆட்சியில் அமர்ந்தாலும் அவர்களோடு பேசுவதற்கான அங்கீகாரத்தை – ஆணையை - பெற்றவர்கள் என்ற நிலையில், தமிழரசுக் கட்சி தன்னை முன்னிறுத்தியாக வேண்டும். அது, மக்களின் மனநிலைகளையும் உள்வாங்கி பிரதிபலிக்க வேண்டும். அதன் பிரகாரம், இம்முறையும் சஜித்தை ஆதரிப்பதற்கான தீர்மானத்தை எடுத்திருக்கின்றது. 2019ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை நோக்கியே தமிழ் மக்களின் வாக்குத் திரட்சி இருந்தது. அப்போதும், தமிழரசுக் கட்சி சஜித்தையே ஆதரித்திருந்தது. இரா.சம்பந்தன், மாவை, எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன் தொடங்கி தமிழரசுக் கட்சி உள்ளடங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சஜித்துக்காக பிரச்சாரத்தை முன்னெடுத்தும் இருந்தனர். இம்முறையும் சஜித்தை நோக்கிய தமிழ் மக்களின் திரட்சியே பெருமளவு இருக்கும். தமிழரசுக் கட்சிக்கு சஜித்தை விட்டால் வேறு தெரிவுகள் கண்முன்னால் இல்லை. ரணிலை ஆதரிப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. டக்ளஸும், பிள்ளையானும்,
வியாழேந்திரனும், அங்கஜனும் ரணிலோடு இருக்கிறார்கள். அவர்களோடு கலப்பதற்கு தமிழரசுக் கட்சி விரும்பாது. அப்படிக் கலந்தால், எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கட்சியாக தன்னை முன்னிறுத்துவதில் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அநுரகுமார திசாநாயக்கதை ஆதரிப்பதற்கும், தமிழரசுக் கட்சியினால் முடியாது. ஏனெனில், வடக்கு கிழக்கு பிரிப்பு மற்றும் இறுதி யுத்தத்தில் ராஜபக்ஷக்களோடான நெருக்கமும் இராணுவத்திற்கு ஆள்களைச் சேர்ப்பதற்கான ஜே.வி.பியின் பங்களிப்பையும் தமிழ் மக்கள் இன்னமும் மறக்கவில்லை. இருப்பதில், பாதிப்புக் குறைந்தது சஜித்தை ஆதரிப்பது என்ற தெரிவுதான், அதனையே, அந்தக் கட்சி எடுத்திருக்கின்றது.
நல்லாட்சிக் காலம் முதல் ஒத்திவைக்கப்பட்டு வந்திருக்கின்ற மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான, தனிநபர் பிரேரணையை நாடாளுமன்றத்துக்குள் அனுமதிப்போம் என்று ரணில் அண்மைக்காலத்தில் கூறிவந்தார். அந்தப் பிரேரணையை இரண்டாவது வாசிப்பு வரையில் நாடாளுமன்றத்துக்குள் நிறைவேற்றவும் செய்தார். ஆனால், தமிழரசுக் கட்சி சஜித்தை ஆதரிப்பதாக அறிவித்ததும், மூன்றாவது வாக்கெடுப்பை நடத்தாது, பிரேரணையை ஒத்திவைத்துவிட்டார். இதுதான், ரணிலின் அரசியல் நேர்மை. ஏற்கனவே, தமிழ் மக்களின் வாக்குகள் சஜித்துக்கு திரள்வதைத் தடுப்பதற்காக வடக்கு கிழக்கில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சாராயக் கடைகளுக்கான அனுமதிப்பத்திரத்தை ரணில் அரசாங்கம் வழங்கியிருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. அதனைப் பெற்றவர்களில் சிலர் ரணிலை வெளிப்படையாக ஆதரிக்கிறார்கள். இன்னும் சிலரோ, சஜித்துக்கு செல்லும் வாக்குகளை தடுப்பதற்காக தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்துக்கு பின்னால் நிற்கிறார்கள் என்று தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. அதுபோல, கடந்த காலத்தில் தென் இலங்கை அரசோடும் அதன் மூர்க்கக் கருவியான இராணுவத்தோடும் இணைந்து இயங்கியவர்கள் பலர், தமிழ்ப்
பொது வேட்பாளர் கோசத்துக்குப் பின்னால் இருக்கிறார்கள் என்பதை வரலாறு பதிவு செய்கின்றது. அப்படியான நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தின் மீது, ‘ரணிலின் பினாமி அடையாளமும் – சாராயக் கடைக்கான அனுமதிக்காரர்களும் இருக்கிறார்கள்’ என்ற வாதத்தை புறந்தள்ளுவது அவ்வளவு இலகுவானது அல்ல.
தமிழரசுக் கட்சியின் சஜித்துக்கான ஆதரவுத் தீர்மானத்தை விமர்சித்த சிலர், நல்லூர் முருகன் தேர்த் திருவிழா நடைபெறும் நாளில், மத்திய குழுக் கூட்டம் நடைபெற்றதாக வாதிடுகிறார்கள். தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் தலைவருக்கு அறிவிக்காமல் ஒருபோதும் கூட்டப்படுவதில்லை. கூட்டத்தின் திகதி, தலைவரோடு பேசித்தான் தீர்மானிக்கப்பட்டு, கட்சியின் செயலாளரினால் உறுப்பினர்களுக்கு கடிதங்களினூடு அறிவிக்கப்படும். அதுபோக, ஆடி, ஆவணி மாதங்களில் கோயில்களில் திருவிழாக் காலம். அதனைக் காட்டி , அரசியல் தீர்மானங்கள் எடுப்பதை ஒத்திவைக்க வேண்டும் என்று வாதிடுவது அபத்தமானது. நாட்டில், முக்கியமானதொரு தேர்தல் நடைபெறும் போது, அதுவும் தமிழ் மக்களின் முதன்மைக் கட்சியான தமிழரசுக் கட்சி, கோயில் – தேவாலாய -பள்ளிவாசல் நிகழ்வுகளைக் காட்டி ஒதுங்க வேண்டும் என்று கோருவது அரசியல் அறிவுள்ள – அறமுள்ள யாரும் செய்ய மாட்டார்கள். நல்லூர் தேர்த் திருவிழாவைக் காட்டி கட்சியின் தீர்மானத்தை கேள்விக்குள்ளாக்கும் நபர்களுக்குப் பின்னால், மதவாத – சாதியவாத குழப்பங்களை தோற்றுவிக்கும் எண்ணம் இருப்பதாகவே கொள்ள வேண்டும். கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தைத் தாண்டி, தேர்த்திருவிழா முக்கியமானது என்றால், சம்பந்தப்பட்டவர்கள் சிறீதரன் போன்று, தனது தீர்மானத்தை கடிதங்கள் மூலமாவது கட்சிக்கு அறிவித்திருக்க வேண்டும். (ஏனெனில், அவரும் தேர்த் திருவிழாவுக்குத்தான் பிரித்தானியா சென்றிருக்கிறார்.) அதனையும் செய்யாது ஒழித்தோடுவது அரசியல் திரணியற்ற நிலை.
தமிழரசுக் கட்சி, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தன்னுடைய தீர்மானத்தை தமிழ் மக்களிடம் முன்வைத்துவிட்டது. அந்தத் தீர்மானம் ஏன் எடுக்கப்பட்டது, அதற்கான தர்க்க ரீதியான காரணங்கள் என்ன என்பதை, அந்தக் கட்சி மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். அதனை ஏற்பதும், ஏற்காமல் விடுவதும் மக்களின் முடிவு. இங்கு இறுதி முடிவை மக்களே எடுக்கிறார்கள். அதனைத்தான் ஜனநாயகம் பிரசவிக்கின்றது. இல்லாது, மக்களை ஒரே முனையில் தள்ளுவதற்கு இதுவொன்றும் ஆயுதமுனை அரசியல் அல்ல. அப்படியான சிந்தனையோடு இன்னமும் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் பலரும் இருக்கிறார்கள். தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்துவதன் மூலம், தங்களின் முடிவுகளின் முன்னால் தமிழரசுக் கட்சி அடிபணியும் என்று பொதுக் கட்டமைப்பின் கட்சிகளும், அரசியல் பத்தியாளர்களும் வெளிப்படையாக கூறியிருக்கிறார்கள். அந்த மனநிலையில் நின்று அரசியலை அணுகும் தரப்பினருக்கு, தமிழரசுக் கட்சியின் ஜனநாயகத்தன்மையுள்ள அரசியல் அணுகுமுறை எரிச்சலூட்டுவது இயல்பானது.