Saturday, October 10, 2026

அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை: ஓ.பி.எஸ். தரப்பு மேல்முறையீட்டு மனு தாக்கல்!


அ.தி.மு.கவின் பெயர், கொடி, சின்னம், கடித தலைப்பு போன்றவற்றை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஜூலை 11 ஆம் ஆண்டு நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரை கட்சியில் இருந்து நீக்கியும், பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை எதிர்த்து ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கில், அவர் உட்பட 4 பேரை நீக்கி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், அ.தி.மு.கவின் பெயர், கொடி, சின்னம், கடித்த தலைப்பு போன்றவற்றை ஓ.பி.எஸ். தரப்பினர் பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார் நேற்று பிறப்பித்த உத்தரவில், பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை எதுவும் விதிக்கவில்லை. எனவே, அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம், கடித்த தலைப்பு போன்றவற்றை, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பி.எஸ். மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்த கூடாது என்று இடைக்கால தடை விதித்து, வழக்கை நவம்பர் 30 ஆம் திகதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஓ,பி,எஸ், தரப்பில் ஒரு முறையீடு செய்யப்பட்டது. தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றும் முறையிடப்பட்டது.

இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதிகள், மனு தாக்கல் செய்யும் நடைமுறைகள் முடிந்து, எண்ணிடும் நடைமுறைகள் முடிவுற்றால் இந்த வழக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.  

you may also like