- by Editor
- 1 year ago
ரணில்: ராஜபக்ஷக்களின் வேண்டாத விருந்தினர்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
- புருஜோத்தமன் தங்கமயில. -
ரணிலுக்கும் ராஜபக்ஷக்களுக்கும் இடையிலான அரசியல் புரிந்துணர்வு எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் நாளுக்கு நாள் மிக மோசமாக மாறி வருகின்றது. ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்தி, அதில் வெற்றிபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ரணிலிடம், முதலில் பொதுத் தேர்தலை நடத்தும் கோரிக்கையோடு ராஜபக்ஷக்கள் பேச்சுவார்த்தைக்கு சென்றதே, ரணில் - ராஜபக்ஷக்களுக்கு இடையிலான இணக்கப்பாட்டில் விழுந்த பலமான அடியாகும்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாங்கள் ஆதரவளித்தாலும் ரணிலால் வெற்றிபெற முடியாது என்று ராஜபக்ஷக்களின் எண்ணப்பாடு. அப்படியான நிலையில், ஜனாதிபதித் தேர்தலை முதலில் எதிர்கொண்டு அதில், தோற்பது என்பது ராஜபக்ஷக்களின் பலத்தினை மிகமோசமாக சிதைக்கும். அதுவும், ரணிலால் ஜனாதிபதியாக வெற்றிபெற முடியாது என்பதைக் காட்டிலும் அவரினால் முதல் இரு இடங்களில்கூட வர முடியுமா என்ற சந்தேகம் நீடிக்கின்றது. சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில்தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி என்ற நிலை தென் இலங்கையில் இருக்கின்றது. அப்படியான நிலையில், மூன்றாவது இடத்தைப் பிடிக்கப்போகும் ரணிலுக்காக ராஜபக்ஷக்கள் ஆதரவளித்தார்கள் என்ற நிலை காணப்பட்டால், அது பொதுத் தேர்தலில் ராஜபக்ஷக்களை பிரதான எதிர்க்கட்சி நிலை என்பதைத் தாண்டி மூன்றாம் நிலைக்கு தள்ளிவிடும். அது, எதிர்கால அடையாள அரசியலுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதுதான் ராஜபகக்ஷக்களினதும் பொதுஜன பெரமுனவில் உள்ள பெரும்பான்மையானோரினதும் எண்ணப்பாடு. அதனால், முதலில் பொதுத் தேர்தலை நடத்தி, அதில் கௌரவமான தோல்வியோடு பிரதான எதிர்க்கட்சி என்ற நிலையை அடைவது குறித்துதான் பஸில் ராஜபக்ஷவும், நாமல் ராஜபக்ஷவும் சிந்தித்து செயலாற்றுகிறார்கள். ரணிலோடு மிக நெகிழ்வுப்போக்கோடு இருக்கும் மஹிந்த ராஜபக்ஷ , பஸில் - நாமலின் நிலைப்பாடுகளில் உள்ள யதார்த்தத்தைப் புரிந்து கொண்ட பின்னர், அமைதியாக விடயங்களை கவனிக்கும் நிலைக்கு சென்றிருக்கிறார். இப்போது, அவர் ரணிலுக்காக அவ்வளவு பரிந்து பேசுவதில்லை. கட்சியின் முடிவுதான் இறுதி முடிவு என்ற மாதிரியான விடயங்களை ஊடகங்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.
ஆனால், நாமல் ராஜபக்ஷவோ அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் ஒரு வேட்பாளர் களம் காண்பார் என்று அறிவித்திருக்கிறார். இப்போது பெரமுன பஸில் - நாமல் என்ற இரு ராஜபக்ஷக்களின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருக்கின்றது. பஸிலுக்கும் நாமலுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி என்பது வெளிப்படையானது. ஆனால், வெற்றியைப்பெற முடியாத ரணிலைத் தேவையற்றுத் தூக்கிச் சுமப்பது என்பது பெரமுனவைப் பலமிழக்கச் செய்துவிடும் என்பதில் அவர்கள் இருவரும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். அவர்களின் அரசியல் அதிகார இலக்கு 2029ஐ குறித்தது ஆகும். இனி வரப்போகும் ஐந்து வருடங்களை பிரதான எதிர்க்கட்சியாக இருப்பதன் மூலம் வெற்றிகரமான கட்டத்திற்கு நகர முடியும் என்பதில் அவர்கள் இருவரும் குறியாக இருக்கிறார்கள். 2029இல் யார் அதிகாரமிக்க பதவிகளில் அமருவது என்பது தொடர்பில் இருவரும் அப்போது அடித்துக் கொள்ளலாம். ஆனால், இப்போது தேவையற்று பொதுவெளியில் முரண்பாடான கருத்துக்களை வெளிப்படுத்துவது, கட்சிக்கு பாதிப்பானது என்ற கோணத்தில் சிந்தித்து செயலாற்றுகிறார்கள்.
ராஜபக்ஷக்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டம் வெற்றிபெற்று இரண்டு வருடங்கள் ஆவதற்கு முன்னரேயே, ராஜபக்ஷக்கள் மீண்டும் தங்களின் அதிகார எல்லையைத் தொட்டுவிட்டார்கள். ராஜபக்ஷக்கள் மக்களின் கோபத்தினால் ஓடி ஒளிந்த போது, அவர்களின் அரசியல் எதிர்காலம் குறைந்தது ஒரு தசாப்த காலத்துக்காவது முடக்கப்பட்டுவிடும் என்றுதான் பல தரப்பினரும் எண்ணினார்கள். ஆனால், ராஜபக்ஷக்கள் மிகவேகமாகவே மீண்டு எழுந்திருக்கிறார்கள். 2015 ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு ராஜபக்ஷக்கள் அகற்றப்பட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குள்ளேயே அவர்கள், தென் இலங்கையில் மிக வீரியமான எழுச்சியை நிலைநாட்டினார்கள். இரண்டாவது தடவையாக, நாட்டு மக்களினால் துரத்தியடிக்கப்பட்ட பின்னரும்கூட அவர்கள் இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சியாக மாறிவிட வேண்டும் என்ற நிலையை நோக்கி வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் இலங்கை அரசியல் என்பது, ஐக்கிய தேசியக் கட்சி எதிர் ஏனைய சிங்கள, பௌத்த தேசியவாத சக்திகள் என்ற நிலைப்பாட்டில் நிலைத்தது. ஆனால், ராஜபக்ஷக்களின் எழுச்சிக்குப் பின்னரான அரசியல் என்பது, ராஜபக்ஷக்கள் எதிர் ஏனைய கட்சிகள் என்பதாக மாறிவிட்டது. அது, ராஜபக்ஷக்களுக்கு எதிரான மற்றைய கட்சிகளின் நிலைப்பாட்டினை உணர்த்துவது அல்ல. மாறாக, ராஜபக்ஷக்கள் தனித்தே மிகப்பலமாக இருக்கின்றார்கள் என்ற விடயத்தைத் தெளிவாக உணர்த்துகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி டி.எஸ்.சேனநாயக்கவின் ஆட்சி அமைப்போடு இலங்கை அரசியலின் மூல சக்தியாக மாறியது. அதுபோல, அந்தக் கட்சியின் அதியுச்ச அதிகார எழுச்சி ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில் நிகழ்ந்தது. அதற்கு அடுத்து வந்த ரணசிங்க பிரேமதாஸ காலம் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் வீழ்ச்சிக் காலத்தின் ஆரம்பமாகும். அதிலும், பிரேமதாஸ கொலையோடு கட்சி ரணிலின் கைகளுக்குள் விழுந்தது. அதன்பின்னரான காலம் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் பேரழிவுக் காலமாகும். இன்றைக்கு அந்தக் கட்சிக்கு என்றொரு வாக்கு வங்கியே இல்லை. கடந்த பொதுத் தேர்தலில் நாடு முழுவதிலுமாக இரண்டு இலட்சம் வாக்குகளைப் பெறுவதே மிகப்பெரிய போராட்டமாகப் போய்விட்டது. அப்படியான நிலையில், ரணிலால் தன்னுடைய கட்சியை வைத்துக் கொண்டு தேர்தல்களில் வெற்றிபெறுவது குறித்த சிந்திக்கவே முடியாது. அதனால்தான் புதிய பொதுச் சின்னத்தின் கீழ் ராஜபக்ஷக்களின் ஒத்தாசையோடு தேர்தலை எதிர்கொள்ள நினைக்கிறார். ஆனால், ஒரு கட்சியாக தன்னுடைய சின்னத்தைப் புறந்தள்ளி இன்னொரு சின்னத்தின் கீழ் செல்வது என்பது, கட்சியின் செல்வாக்கை மக்கள் மத்தியில் இழக்கப்பண்ணிவிடும் என்பது இயல்பான வாதமாகும். அந்த வாத்தின் பின்னால், ராஜபக்ஷக்களும் பெரமுனவும் நிற்கின்றது. பெரமுன என்பது, ராஜபக்ஷக்களினால் தோற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட கட்சி. அந்தக் கட்சியின் வெற்றிகளிலும் இன்றைய நிலைத்திருப்பிலும் ராஜபக்ஷக்களைத் தாண்டி யாரினாலும் உரிமை கோர முடியாது. ஏனெனில், பெரமுனவும் - அதன் மொட்டுச் சின்னமும் ராஜபக்ஷக்களின் கட்சி என்ற ஒற்றைக் காரணத்தினால் தென் இலங்கையில் முதன்மைக் காட்சியாக மாறியதாகும்.
ராஜபக்ஷக்களின் தோள்களில் ஏறி ஆட்சியில் அமர்ந்த ரணில், ஆட்சியில் ராஜபக்ஷக்களின் தலையீடுகளை கிட்டத்தட்ட முழுவதுமாக தவிர்த்தார். ஆட்சியைக் கவிழ்க்கும் வல்லமை இருப்பதாக ராஜபக்ஷகளும், பொதுஜன பெரமுனவினரும் பொது வெளியில் வெளிப்படுத்தி வந்தாலும், அவை தொடர்பில் எந்தக் கரிசனையையும் ரணில் கொண்டிருக்கவில்லை. ஜனாதிபதி பதவியில் இருந்து 2024 நடுப்பகுதி வரையில் எந்தக் காரணத்தினாலும் யாரினாலும் தன்னை வெளியேற்ற முடியாது. அப்படியான நிலையில், ஆட்சியில் யாரின் தலையீடுகளையும் உள்வாங்காது, தன்னுடைய ஆளுமையை நிலைநிறுத்திவிட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். அதன்மூலம், திவாலாகிப் போயிருந்த நாட்டை மீட்டெடுத்த தலைவனாகத் தான் பெயர் பெற முடியும் என்று ரணில் செயற்பட்டார். ஆனால், அவரின் எதிர்பார்ப்புக்கள் அவ்வளவு வெற்றியாளிக்கவில்லை. மக்களுக்கு ஆட்சியின் மீதான வெறுப்புணர்வு என்பது பெரிதாக குறையவில்லை. ஆட்சி மாற்றம் ஒன்றை தேர்தலில் மூலம் நிகழ்த்திவிடுவதற்காக காத்திருக்கிறார்கள். இந்த கள யதார்த்தம்தான் ரணிலின் பிடி ராஜபக்ஷக்களின் முன்னால் தளர்வதற்கு முக்கிய காரணமாகும்.
ஆட்சியை மக்கள் மெச்சும் அளவுக்கு நடத்துவதன் மூலம், பொதுஜன பெரமுனவை இரண்டாக உடைத்து ஓர் அணியினரைத் தன் பின்னால் அணிதிரட்டுவதன் மூலம் எதிர்கால தேர்தல் வெற்றிகளை ரணில் இலக்கு வைத்தார். ஆனால், கள யதார்த்தம் அவருக்கு எதிரான நிலையை வெளிப்படுத்துவதை உணர்ந்து கொண்ட பெரமுனவினர், ரணிலின் பக்கம் செல்வது, அரசியல் தற்கொலையாகிவிடும் என்ற சுதாகரித்தக் கொண்டுவிட்டார்கள். இந்த இடம்தான், ராஜபக்ஷக்களின் முன்னால் ரணிலை மீண்டும் சிறிய மனிதராக மாற்றிவிட்டது. யாருக்கு மக்களின் அதிக ஆதரவு என்பதுதான் அரசியலில் அதிகாரத்தை தீர்மானிக்கின்றது. ராஜபக்ஷக்களை புறந்தள்ளிவிட்டு மேலெழ முடியும் என்ற நம்பிக்கையோடு ரணில் செயற்பட்ட போதும், ரணிலைத் தாண்டி ராஜபக்ஷக்கள் மக்களின் பலத்தோடு இருப்பது உறுதியானது. அதனால் ரணிலின் பிடி இப்போது தளர்ந்திருக்கின்றது. ராஜபக்ஷக்கள் அந்த இடத்தில் பிடியை இறுக்கியிருக்கிறார்கள்.
ரணிலை கடந்த காலங்களில் தமிழ் - முஸ்லிம் மக்கள் கணிசமாக ஆதரித்து வந்திருக்கிறார்கள். ராஜபக்ஷக்களுக்கு எதிரான முதன்மை முகமாக ரணிலை தமிழ் - முஸ்லிம் மக்கள் கருதினார்கள். அதனால்தான், தென் இலங்கை முழுவதும் ராஜபக்ஷக்கள் வெற்றிபெறும் போது, வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் ரணில் ஆதரவு அணி வெற்றி வந்திருக்கின்றது. ஆனால் தற்போதைய நிலை அப்படியானது அல்ல. ஏனெனில், ரணிலை பதவியில் ஏற்றியது ராஜபக்ஷக்கள். இந்த விடயம் ரணிலை தமிழ் - முஸ்லிம் மக்களிடம் இருந்து எண்ணிப் பார்க்காத அளவில் அகற்றியிருக்கின்றது. ரணிலுக்கும் ராஜபக்ஷக்களுக்கும் இடையிலான அரசியல் இழுபறி தீர்க்க முடியாத கட்டத்தை எட்டியிருக்கின்ற இன்றைய நிலையிலும், ரணில் என்பது ராஜபக்ஷக்களின் முகம் என்பதே தமிழ் - முஸ்லிம் மக்களின் எண்ணமாகும். அந்த எண்ணத்தை இப்போதைக்கு மாற்றமுடியாது. அதனால், ஜனாதிபதித் தேர்லொன்று வந்தால், அதில் ரணிலை புறந்தள்ளியே தமிழ் - முஸ்லிம் மக்கள் வாக்களிப்பார்கள். அதனால், ரணினால் நினைத்த அளவுக்கு பிரதான வேட்பாளரைாகும் தகுதி கேள்விக்குள்ளாகி இருக்கின்றது. இந்த இடத்தை ராஜபக்ஷக்கள் விடுவதாக இல்லை.
பதவிகளுக்காக ராஜபக்ஷக்களை எதிர்த்து ரணிலைச் சுற்றி வந்தவர்களும் கூட, இப்போது அவருக்கான ஆதரவு - கட்சிப் பலம் என்பது இல்லை என்ற நிலையில், அவரை விட்டு எப்போது தப்பியோடுவது என்ற எண்ணத்தோடு இருக்கிறார்கள். அதனால், நம்பிக்கையோடு உரையாடுவதற்கான அரசியல் சகா ஒருவரைக்கூட ரணிலால் இப்போது தேடி அடைய முடியாத நிலை இருக்கின்றது. இது, தென் இலங்கை அரசியலில் ரணில் அற்ற அரசியல் ஒழுங்கை நோக்கிய பாதையைத் திறந்திருக்கின்றது. கடந்த பொதுத் தேர்தலோடு ரணிலின் அரசியல் வாழ்வு முடிந்துவிட்டதாகவே அனைவரும் நினைத்தார்கள். ஆனால், ராஜபக்ஷக்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டம் வடிவில் ரணில் மீண்டும் அரசியலில் முதன்மை நபராக மாறினார். அதியுச்ச அதிகாரத்தையும் அடைந்தார். ஆனால், அந்த அதிகாரத்தை தக்க வைக்கும் நிலையினை அவரினால் அடைய முடியாது போய்விட்டது. தென் இலங்கை அரசியல் களத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி கிட்டத்தட்ட முழுவதுமாக அகற்றப்பட்டு, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன என்ற மூன்று கட்சிகளை நோக்கி கூர்மைப்படுகின்றது.
இதில் வேடிக்கை என்னவென்றால், ரணில் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பார் என்று நம்பிய சில தமிழ்த் தலைவர்கள், அவருக்காக முழு வீச்சில் வேலை செய்வதற்கு தயாராக இருந்தார்கள். குறிப்பாக, ஜனாதிபதித் தேர்தலில் ரணிலை வெற்றிபெற வைப்பதற்கான திட்டங்களின் போக்கில் தமிழ்ப் பொது வேட்பாளர், தேர்தல் புறக்கணிப்பு என்ற விடயங்களை கையாளத் தொடங்கினார்கள். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பை தென் இலங்கை பிரதிபலிக்கவில்லை. இதனால், ரணிலை நம்பிய தமிழ்த் தலைவர்களும் கடந்த காலத்தில் ஏமாற்றப்பட்டதைப் போன்று, இப்போதும் ஏமாறும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.
ராஜபக்ஷ்க்களை வெற்றிக் குதிரைகளாகவும் அதில் ஏறி பயணிக்கும் வெற்றி வீரனாக தன்னையும் ரணில் எண்ணிக் கொண்டிருந்தார். அந்த நிலையை அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரையில் பேணவும் முடியும் என்றும் அவர் நம்பினார். ஆனால், ராஜபக்ஷக்கள் தங்களை வீழ்ந்துவிட்ட யானைகளாக கருதாமல், மீண்டும் துள்ளி எழுந்து ஓடும் குதிரைகளாக எண்ணி, தனித்து ஓடத் தொடங்கிவிட்டார்கள். அந்த ஓட்டம் 2029இல் அடையப்போகும் தேர்தல் வெற்றிகளைக் குறித்தது. அதற்காக அவர்கள் யாரையும் தங்களின் மீது ஏற்றுவார்கள். தேவையில்லை என்றால், தூக்கி எறிந்துவிட்டு தொடர்ந்தும் ஓடுவார்கள். 2022இல் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவே ரணிலை ராஜபக்ஷக்கள் தூக்கிச் சுமந்தார்கள். இப்போது, தேவை முடிந்துவிட்டது. அரசியல் நியதி, தூக்கி எறிந்துவிட்டு வெற்றிக் கோட்டை அடைந்து கொள் என்பதாகும். அதில் ராஜபக்ஷக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதனால், ரணில் இப்போது ராஜபக்ஷக்களுக்கு வேண்டாத விருந்தினர்.