Saturday, October 10, 2026

உங்கள் பிள்ளையின் போன் 'டிஜிட்டல் போதை'யாக மாறுகிறதா?


ஒன்லைன் விளையாட்டுகள் (Online Gaming) மூலம் சிறுவர்களின் நடத்தை மற்றும் உளவியல் நிலையில் பாரதூரமான தாக்கங்கள் ஏற்படக்கூடும் என இலங்கை கணினி அவசர தயார்நிலை பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்ததாவது, நவீன ஒன்லைன் விளையாட்டுகளில் உலகளாவிய அளவில் அறிமுகமில்லாத நபர்களுடன் நேரடி உரையாடல் வசதி உள்ளதால், சிறுவர்கள் அவர்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

நீண்ட நேரம் விளையாட்டுகளில் ஈடுபடும் சிறுவர்கள், தெரியாத நபர்களிடம் தமது தனிப்பட்ட பிரச்சினைகளை பகிர்ந்து கொள்வதுடன், உணர்ச்சி ரீதியாக அவர்கள்மீது சார்ந்திருக்கும் நிலையும் உருவாகலாம் என அவர் எச்சரித்துள்ளார். இதன் மூலம் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் தவறாக பகிரப்படும் அபாயம் அதிகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விளையாட்டுகளில் உள்ள ‘ரிவார்டு’ (Reward) முறைமைகள் சிறுவர்களை அடிமைபடுத்தும் தன்மை கொண்டதுடன், சில நேரங்களில் சூதாட்டத்தை ஒத்த நடத்தையை உருவாக்கும் அபாயமும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில சம்பவங்களில், பெற்றோரின் அனுமதி இல்லாமல் கடன் அட்டைகளை பயன்படுத்தி 4 இலட்சம் முதல் 5 இலட்சம் ரூபா வரை விளையாட்டுகளுக்காக செலவிடப்பட்ட நிகழ்வுகளும் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

விளையாட்டுகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் போது சில சிறுவர்கள் ஆக்ரோஷமாகவும் மன அழுத்தத்திற்கும் உள்ளாவதாக பெற்றோர் கவனித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தடுக்கும் வகையில் PEGI போன்ற வயது மதிப்பீட்டு முறைகளைப் பயன்படுத்தி விளையாட்டுகளின் பொருத்தத்தை உறுதி செய்யுமாறும், அதேபோல் ‘Parental Controls’ மற்றும் திரை நேர முகாமைத்துவம் (Screen-time management) மூலம் குழந்தைகளின் இணைய செயல்பாடுகளை கண்காணிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

you may also like