Tuesday, October 6, 2026

டைட்டானிக் உயிர்தப்பிய பயணி பயன்படுத்திய லைஃப் ஜாக்கெட் வரலாற்று ஏலத்தில்


டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிர் தப்பிய பயணி ஒருவர் பயன்படுத்திய பாதுகாப்பு உடை (Life Jacket), இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் சுமார் 670,000 பவுண்டுகளுக்கு (இலங்கை ரூபாயில் சுமார் 25 கோடிக்கும் அதிகம்) விற்பனை செய்யப்பட்டுள்ளது.

டைட்டானிக் கப்பல் விபத்தில் நிகழ்ந்து 114 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், உயிர் தப்பிய பயணி ஒருவர் பயன்படுத்திய பாதுகாப்பு உடை ஏலத்திற்கு வந்தது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு உடை, 1912ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் உயிர் தப்பிய முதலாம் வகுப்புப் பயணி லாரா மேபெல் பிராங்கடெல்லி (Laura Mabel Francatelli) என்பவரால் பயன்படுத்தப்பட்டதாகும். இதில் அவர் மற்றும் மற்ற உயிர்தப்பியவர்களின் கையெழுத்துகளும் இடம்பெற்றுள்ளன.

12 பைகள் மற்றும் தோள்பட்டை தாங்கிகள் கொண்ட இந்த உடை, ஆரம்பத்தில் 350,000 பவுண்டுகள் வரை மட்டுமே விலை போகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் உலகளாவிய சேகரிப்பாளர்களின் அதிக ஆர்வத்தால், அது இரட்டிப்பு விலைக்கு விற்பனையாகியுள்ளது.

அதே ஏலத்தில், டைட்டானிக் மீட்புப் படகில் பயன்படுத்தப்பட்ட இருக்கை மெத்தை ஒன்று 390,000 பவுண்டுகளுக்கு விற்பனையாகியுள்ளது. இதனை அமெரிக்காவின் டென்னசியில் உள்ள டைட்டானிக் அருங்காட்சியகம் வாங்கியுள்ளது.

டைட்டானிக் கப்பல் விபத்தில் 114ஆம் ஆண்டு நினைவு தினம் ஏப்ரல் 14ஆம் திகதி அனுசரிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஏலம் உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

you may also like