Friday, October 9, 2026

செப்டெம்பர் 24 நாடாளுமன்ற முற்றுகைக்கு அழைப்பு விடுக்கும் எதிர்க்கட்சி


அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அரசு மேற்கொண்டுவரும் முயற்சியை முறியடிப்பதற்காக, எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள அனைத்துப் பிரதான பாதைகளையும் முற்றுகையிடுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் ஐக்கிய ஒருங்கிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அமைப்பாளர் ஆனந்த பாலித அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று (19.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசு தனது ஊழல்வாதிகளைப் பாதுகாக்கவும், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் 22ஆவது திருத்தத்தை அவசரமாக நிறைவேற்ற முயல்கிறது. மக்கள் இறையாண்மையைப் பாதுகாக்கும் வகையில், நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இதற்காகச் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

இக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்காத எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்பதே செப்டெம்பர் 24 போராட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காகச் சட்டத்தரணிகள் சங்கம், 54 தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

பாதாள உலகக் குற்றங்களும் போதைப்பொருள் புழக்கமும் பாடசாலைகள் வரை ஊடுருவி சிவில் பாதுகாப்பு சீர்குலைந்துள்ளது. அண்மையில் இரு அப்பாவிச் சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அரசு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை எனவும், குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இந்தியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) மாநாட்டிற்கு இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்தியா மற்றும் சீனாவிடம் கடன்களைப் பெற்றிருந்தாலும், சர்வதேச மாநாடுகளில் புறக்கணிக்கப்படுவது அரசின் இராஜதந்திர அங்கீகாரமின்மையைக் காட்டுகிறது.

எரிபொருள் விலைச்சூத்திரத்தைச் சரியாக நடைமுறைப்படுத்தாமல் கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் 27 பில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியுள்ளது. இருப்பினும், புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளை உருவாக்காமல், திருகோணமலை தொட்டிகளையும் வெளிநாடுகளுக்கு வழங்கிவிட்டு, மீண்டும் சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விலையை உயர்த்த அரசு ஆயத்தமாகி வருகிறது.

you may also like