- by Editor
- 2 years ago
ரஷ்யா - யுக்ரைன் வான்வழித் தாக்குதல்கள் தீவிரம்
ரஷ்யா மற்றும் யுக்ரைன் இடையிலான வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு தரப்பிலும் தலா 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் யுக்ரைன் மேற்கொண்டுள்ள மிகப்பெரிய அளவிலான ஆளில்லா வானூர்தி தாக்குதல் இதுவென ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யுக்ரைன் தரப்பிலிருந்து மொத்தம் 822 ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்பட்டதாகவும், அவற்றில் சுமார் 600 ட்ரோன்கள் மொஸ்கோவை இலக்காகக் கொண்டு அனுப்பப்பட்டதாகவும் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் தென்மேற்கு ரஷ்யாவின் ரொஸ்டோவ் பிராந்தியத்தில் 5 பேரும், பெல்கொரோட் மற்றும் மொஸ்கோ பகுதிகளில் தலா ஒருவருமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், மொஸ்கோ நகர மையத்திலிருந்து சுமார் 25 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ‘வைல்ட்பெர்ரீஸ்’ இணையவழி வர்த்தக நிறுவனத்தின் களஞ்சியசாலை ஒன்றும் தாக்குதலுக்கு இலக்காகி தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, யுக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 39க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கியேவ் நகரில் ‘ஃபிளமிங்கோ’ ஏவுகணைகளுக்கான உதிரிப்பாகங்கள் தயாரிக்கப்படும் மையம் மற்றும் வானூர்தி உற்பத்தித் தொழிற்சாலை ஆகியவற்றை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
எனினும், பொச்சைனா மாவட்டத்தில் புத்தகங்கள் மற்றும் பழைய இசைத்தட்டுகள் விற்பனை செய்யப்படும் பிரபல சந்தையும் தாக்குதலில் கடுமையாக சேதமடைந்துள்ளதாக யுக்ரைன் தெரிவித்துள்ளது.
இதனால் அரிய வகை இசைத்தட்டுகள் மற்றும் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் யுக்ரைனின் 13 பிராந்தியங்களை இலக்காகக் கொண்டு 1,550க்கும் மேற்பட்ட ஆளில்லா வானூர்திகள், 1,560 வழிகாட்டப்பட்ட வான்குண்டுகள் மற்றும் 62 ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.