- by Editor
- 1 year ago
காவி உடையா? சிறைச் சீருடையா? கைதிகளின் ஆடை குறித்து சிறை ஆணையர் விளக்கம்
-
- by Editor,
- 2 days ago
- in இலங்கை செய்திகள்
மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள், சிறைச்சாலை விதிமுறைகளுக்கு அமைய சிறைச்சாலையால் வழங்கப்படும் சீருடையை அணிந்தபடியே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறை ஆணையருமான செனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.
கைதிகள் அணியும் சிறைச்சாலை சீருடைகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் பல்வேறு கருத்துக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, சிறைச்சாலை விதிமுறைகளின்படி, பௌத்த பிக்கு ஒருவருக்கு நீதிமன்றத்தால் எளிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தால், அவர் சிறையில் தண்டனை அனுபவிக்கும் காலத்தில் தனது காவி உடையினை அணிய அனுமதி வழங்கப்படும்.
எனினும், கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள எந்தவொரு நபரும் சிறைச்சாலை சீருடையை அணிய வேண்டும் என சிறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும், மூன்று ஆண்டுகளுக்குக் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது, சிறை கண்காணிப்பாளரின் அனுமதியுடன், தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் அவர் அணிந்திருந்த சாதாரண உடைகளை அணிந்து நீதிமன்றத்தில் ஆஜராக அனுமதிக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று, பௌத்த பிக்கு ஒருவருக்கும் இத்தகைய சந்தர்ப்பத்தில் தனது காவி உடையினை அணிந்து நீதிமன்றத்தில் ஆஜராக அனுமதி வழங்கப்படலாம்.
ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும்போது, சிறைச்சாலையால் வழங்கப்படும் சீருடையையே அணிந்திருக்க வேண்டும் என செனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் 63க்கும் மேற்பட்ட மதத் தலைவர்கள் தண்டனை அனுபவித்து வருவதாகவும், அவர்களும் சிறைச்சாலை விதிமுறைகளுக்கு அமைய சிறைச் சீருடைகளை அணிந்தே தண்டனை அனுபவித்து வருவதாகவும் சிறை ஆணையர் மேலும் தெரிவித்துள்ளார்.