Friday, October 9, 2026

உரலார் கேள்வியும் உலக்கையார் பதிலும்


- கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் -

1. உரலார் கேள்வி :-

பட்டிமண்டபம் என்ற பெயர் சரியானதா? பட்டிமன்றம் என்ற பெயர் சரியானதா? தற்போதைய பட்டிமன்றங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

உலக்கையார் பதில் :-

பட்டிமண்டபம் என்பது ஒரு சொல். அதனைப் பட்டி, மண்டபம் என்று பிரித்தலாகாது. பட்டிமண்டபம் என்ற அச் சொல்லுக்கு 'வித்தியாமண்டபம்' என்று அகராதியில் பொருளிட்டிருக்கிறார்கள். 'வித்தியாமண்டபம்' என்றால் வித்தையை வெளிப்படுத்துகின்ற இடம் என்று பொருள். தர்க்கம் செய்வதன் மூலம் வித்தையை வெளிப்படுத்துவதால்தான் இத்தகைய அரங்கங்களுக்குப் பட்டிமண்டபம் என்று பெயரிட்டிருக்கிறார்கள். எனவே பட்டிமண்டபம் என்ற பெயர்தான் சரியானது என்று நினைக்கிறேன்.

நமது பழைய இலக்கியங்களிலும் பட்டிமண்டபம் என்ற பெயர்தான் பாவிக்கப்பட்டிருக்கிறது. திருவாசகத்திலும், மணிமேகலையிலும், கம்பனிலும் இந்நிகழ்வு பட்டிமண்டபம் என்ற பெயரால்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பட்டிமண்டபங்களுக்கு இன்றைய வடிவினை உண்டாக்கிக் கொடுத்த காரைக்குடிக் கம்பன் கழகத்தின் ஸ்தாபகர் 'கம்பன்அடிப்பொடி' சா.கணேசன் அவர்களும், தனது விழா அழைப்பிதழ்களில் பட்டிமண்டபம் என்ற பெயரையே பாவித்து வந்தார்கள். இன்றுவரை நாங்களும் எங்கள் கம்பன் விழா அழைப்பிதழ்களில் அந்தப் பெயரினையே பாவித்து வருகிறோம்.

தற்போது பரவலாகத் தொலைக்காட்சிகளிலும், வெளியிடங்களிலுமாக நடந்துவரும் விவாத அரங்கங்களுக்கு, பட்டிமண்டபம் என்ற பெயரினை இடாமல் விடுவது நல்லதென்றே படுகிறது. நம் நாட்டிற்கு என்று இல்லாமல் தமிழ்நாட்டுக்குமாகத்தான் இதனைச் சொல்கிறேன். ஏனென்றால், ஒரு காலத்தில் பட்டிமண்டபம் என்ற நிகழ்வு நுண்மையான ஒரு விடயத்தை, அறிஞர்கள் தம் ஆழமான வாதத்திறத்தால் உள்நுழைந்து தேடுவதாகவே அமைந்திருந்தது.

அதனால்தான் 'எட்டினோடு இரண்டறியா எனைப் பட்டிமண்டபம் ஏற்றினை ஏற்றினை' என்றும் 'பட்டிமண்டபம் பாங்கறிந்து ஏறுமின்' என்றும் பழைய புலவர்கள் பாடிவைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இன்றைக்குப் பெரும்பாலும் பட்டிமண்டபங்கள் வெறும் நகைச்சுவை நிகழ்ச்சிகளாக மட்டுமே ஆகிவருகின்றன.

மாமனா? மச்சானா? கணவனா? மனைவியா? போன்ற விவாதங்களில் பேசுகிறவர்களுக்கு உலகியல் அறிவு மட்டும் போதுமானதாய் இருக்கிறது. கல்வியறிவு அங்கு தேவையற்றதாய்ப் போய்விடுகிறது. அந்த உலக அறிவில் 'பழந்தின்று கொட்டைபோட்ட' வயதானவர்கள் எல்லாம் இருந்துகேட்க, தமக்கு வாய்த்த பேச்சுத்திறனை மட்டும் முதலாய் வைத்து, 'முந்தநாள் பெய்த மழைக்கு நேற்று முளைத்த காளான்கள் ' எல்லாம் மேடையேறி அம் முதியவர்களுக்குப் புத்தி சொல்லத் தொடங்கி விட்டன.

நகைச்சுவை ஒன்றே அத்தகையவர்களின் 'கைச்சரக்காய்' இருக்கிறது. இன்று இயல் அரங்குகளில் அத்தகைய நகைச்சுவையாளர்களுக்குத்தான் மதிப்புக் கூடியிருக்கிறது. கேட்போரும் கவுண்டமணி, செந்தில், வடிவேலுவைப் போலத்தான் பேச்சாளர்களைப் பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

இதன் பாதிப்பால் இன்று அறிஞர்கள் கூட, சிறிதும் வெட்கம் இன்றி, தமக்குத்தாமே நகைச்சுவையாளர்கள் என்ற அர்த்தம் வரும்படியான பட்டங்களைச் சூட்டிக் கொள்கிறார்கள்.

உயர்ந்த சிந்தனைப் பேச்சாளர்களும், அத்தகைய நகைச்சுவைப் பேச்சாளர்களின் நிழலில் வாழத் தலைப்பட்டிருப்பது கற்றோர்க்கு வருத்தம் தருகிறது. கலியின் கொடுமை என்பதைவிட இதற்கு வேறு என்ன காரணத்தைச் சொல்வது?

பட்டிமண்டபங்களின் தரத்தைக் காக்கமுடியாவிட்டாலும், அவற்றின் 'பிராண்ட் நேமையாவது' காக்கலாம் என்பதற்காகவே, அந்தப் பெயரையேனும் பாவிக்காமல் விடுவது நல்லதென்கிறேன். நான் சொன்னால் மட்டும் கேட்கவா போகிறார்கள்?

சல்லடையாரின் சலிப்பு :- 'பேச்சாளர்கள் 'பபூன்ஸ்' ஆகலாமா?'

2. உரலார் கேள்வி :-

முத்தமிழில் எத்தமிழ் பெரியது என்று நினைக்கிறீர்கள் ?

உலக்கையார் பதில் :-

பத்து வருடங்களுக்கு முன்பு இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தீர்களானால், இயல் தமிழ்தான் பெரியது என்று அடித்துச் சொல்லியிருப்பேன். ஆனால் இப்போது எனது அக் கருத்து மாறிவிட்டது. இயல் தமிழைவிட, இசைத் தமிழ் மீதான எனது மதிப்பு நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே போகிறது. நம் அறிவால் இறைவனைத் தொடமுடியாது என்பது திண்ணம். ஆனால் உணர்வினால் இறைவனைச் சேரமுடியும். அதனால்தான் நம் மாணிக்கவாசகர் 'சொல்லிய பாட்டின் பொருள் அறிந்து சொல்லுவார்' என்று பாடாமல் 'சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்' என்று பாடினார்.

இயல் தமிழ் அறிவிற்கான கருவி. இசைத்தமிழ் உணர்விற்கான கருவி. அதனால்தான் இறை நோக்கிய விருப்பம் வளரவளர, இசை நோக்கிய விருப்பமும் வளர்ந்துகொண்டே போகிறது. இயல் தமிழ் கடவுள் பற்றி அறியச் செய்யும், இசைத்தமிழ் கடவுளை உணரச் செய்யும். அதனால்தான் இப்போது நான் கட்சி மாறிவிட்டேன். சந்தேகத்திற்கு இடமில்லாமல் தற்போது என் வாக்கு இசைத் தமிழுக்கேயாம்.

சல்லடையாரின் சலிப்பு :- 'இசைத்தமிழ் நீசெய்த அரும் சாதனை'.....எப்பூபூபூடி?

3. உரலார் கேள்வி :-

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு திருமலையில் நடைபெற இருக்கிறதாமே ?

உலக்கையார் பதில் :-

தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவி அடுத்து யாருக்குப் போகப்போகிறது என்பதை, ஒரு வேளை இந்த மாநாடு தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கலாம். தற்போதைய கட்சியின் தலைவர் 'மாவை' நல்லவராய் இருக்கலாம். ஆனால் வல்லவர் இல்லை என்பது திண்ணம்!

மாவை அவர்கள் வெறும் வயது மூப்பினையே தனது தகுதியாய் வைத்திருக்கிறார். இதுவரை இப் பதவியை வைத்து இவர் செய்த சாதனை என்ன? என்ற கேள்விக்குப் பதில் ஏதும் இருப்பதாய்த் தெரியவில்லை.

நம் தலைவர்கள், ஈழத் தமிழர்களுக்குப் பழுதில்லாத இறந்த காலத்தையும் பெற்றுத் தரவில்லை. சிறப்பான எதிர்காலத்தையும் பெற்றுத் தருவார்கள் என்று தோன்றவில்லை.

தலைவருக்கான தகுதி இருக்கிறதா? என்று கேட்டால், இவர்கள் உடனே தமது இறந்த காலதியாக ஒப்பாரியைத் தொடங்கி விடுவார்கள். இவர்கள் போராடுகின்ற பதவிக் கதிரைகளில் அப்படி என்னதான் காந்தம் இருக்கிறதோ? கடவுளுக்குத்தான் தெரியும்.

ஒருமாதிரியாக இவர்களை அந்தப் பதவிக் கதிரைகளில் இருந்து இழுத்துக் கழற்றி எடுத்தாலும் புதிதாய் வரப் போகிறவர்களும் அதில் ஒட்டிக் கொள்ளப் போவது மட்டும் நிச்சயம். இராமன் தனக்கு ஆட்சி வேண்டாம் என்றான். அதனால்தான் அவனுக்கு மதிப்பு வந்தது. அந்த மதிப்பு இனி யாருக்கும் வரும் என்று தோன்றவில்லை.

சல்லடையாரின் சலிப்பு :- ஒட்டிக் கொண்டவர்களை வெட்டி எடுத்தால்தான் உண்டுங்கோ.

4. உரலார் கேள்வி :-

பரத நாட்டியத்தை, பரத்தையரின் நாட்டியம் என்று கூறப்போய் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண மௌலவி பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

உலக்கையார் பதில் :-

வீணாகத் தன் மதிப்பை இழந்திருக்கிறார் இந்த மௌலவி! இதுபற்றிய கருத்தை அவரிடம் யார் கேட்டார்கள்? பரதம் பற்றி அவருக்கு என்னதான் தெரியும்? இன்னொரு சமூகம் சார்ந்த கலைபற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் எவ்வளவு கவனம் செலுத்தியிருக்க வேண்டும்! அதைக்கூடத் தெரியாத இவர் எப்படி ஒரு மௌலவியாய்ச் செயலாற்றுகிறார் ?

ஊடகங்கள் பெருகிவிட்ட இக் காலத்தில், பிழை செய்தால் பெயரெடுத்துவிடலாம் என்ற ஒரு அவலம் நிகழத் தொடங்கியிருக்கிறது. நேற்றுவரை யாரென்று தெரியாமல் இருந்த இந்த மௌலவி பிழையாகப் பேசிப் பிரபல்யம் அடைந்துவிட்டார். வெட்கக்கேடு!

தமது சமூகத்தின் மீதான ஒரு சிறு தூற்றுதலைக்கூட இஸ்லாமியர்கள் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். இதனை இந்த மௌலவி அறிவார். அத்தகையவர் மற்றொரு சமூகத்தின் மீதான இத்தகைய தாக்குதல் கருத்தை எப்படி வெளியிடலாம்?

இந்த நாட்டிற்கு ஏதோ சாபம் நேர்ந்திருக்கிறதுபோல் தெரிகிறது. மதம் சார்ந்த, இனம் சார்ந்த பெரியவர்களுக்கு அன்பு வளர்க்கத் தெரியவில்லை. பகைவளர்க்க நன்றாகத் தெரிகிறது. நஞ்சான வார்த்தைகளைக் கொட்டிவிட்டு, மிக இலகுவாக மன்னிப்புக் கேட்டுத் தப்பிக்கப் பார்க்கிறார்கள். முன்பு ஒரு பாதிரியார், அடுத்து ஒரு பிக்கு. தற்போது ஒரு மௌலவி. இனிஎன்ன? யாராவது ஒரு ஐயரும் தொடங்க வேண்டியதுதான். பகைப்போட்டி நன்றாக நடக்கட்டும்.

சல்லடையாரின் சலிப்பு :- வேதம் ஓதும் சைத்தான்கள். ஹி ஹி ஹி...!

you may also like