- by Editor
- 3 months ago
அகில இலங்கை மகா சபை கட்சி சஜித்துக்கு ஆதரவு என்று அறிவிப்பு
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ஷக்களுக்குப் பயந்து தன்னுடைய காலத்தைச் செலவழித்தவர். அவர் தமிழர்களுக்கு எதுவும் தரமாட்டார். அவரை நம்பமாட்டேன். 13 தவிர வேறு எதுவும் தரமாட்டார். எனவே, ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவதாக எமது அகில இலங்கை மகா சபை கட்சி தீர்மானித்துள்ளது. தமிழ் மக்கள் சஜித்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்."
- இவ்வாறு அகில இலங்கை மகா சபை கட்சியின் தலைவர் கலாநிதி. காசிலிங்கம் விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, வெய் ஓப் மீடியா கற்கை நிலையத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இந்த ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது எனத் தெளிவாகத்தான் இருந்தோம். ரணில் பல வாக்குறுதிகளை எங்களுக்குக் கொடுத்திருந்தார். முதலில் அவருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது அவர் நீங்கள் கூறுங்கள் எல்லாவற்றையும் செய்கின்றேன் என்றார். அப்போது நாங்கள் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் பல விடயங்களைச் செய்யவேண்டியுள்ளது, மாகாண சபைக்குக் கீழ் இருந்த பல பாடசாலைகளை மத்திய அரசின் கீழ் தேசிய பாடசாலைகளாகவும், வைத்தியசாலைகளையும் தேசிய வைத்தியசாலைகளாகவும் மாற்றியுள்ளனர். இதனை உடனடியாக மாகாணத்தின் கீழ் மாற்ற வேண்டும். இதற்குச் சட்டம் இயற்ற வேண்டியதில்லை. இதற்கு ஒரு உத்தரவாதம் வழங்கினால் சரி என்றோம்.
அதே மாதிரி கச்சேரிகளை ஒரு அமைச்சரவை தீர்மானம் எடுத்து மாற்ற முடியும் என்றோம். அதற்கும் உடன்படுவதாக அவர் தெரிவித்தார். நாங்கள் விசேட அதிகாரத்தைக் கொண்டு இவற்றையெல்லாம் உருவாக்க முடியும் என்றோம். அதேவேளை, இதனைச் செயற்படுத்த 5 பேர் கொண்ட ஒரு குழுவை அமைப்பதாகத் தீர்மானித்தோம். அதற்கும் சரி என்றார் ஜனாதிபதி ரணில்.
அதனை இந்தியாவுக்கும் அறிவித்தோம். அதன் பின்னர் அவர் இந்தியாவுக்குச் சென்றபோது அவருக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. அங்கும் இவற்றையெல்லாம் செய்வேன் என்று அவர் கூறினார். ஆனால், திரும்பி இங்கு வந்த பின்னர் இதனைச் செய்யவில்லை. ஏன் என்றால் ராஜபக்ஷ கட்சி இவற்றைச் செய்வதற்கு இடம் கொடுக்கவில்லை எனத் தெரியவந்தது.
ஆதலால் பஸில் ராஜபக்ஷவைச் சந்திப்பதற்கு 5 தடவைகள் முயற்சி செய்தேன். அவர் என்னைச் சந்திப்பதைத் தவிர்த்துக்கொண்டார். அப்படியான ரணில் ராஜபக்ஷக்களுக்குப் பயந்து கொண்டவர் என்பதால் அவரிடமிருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது. எனவே, இவரால் எதுவுமே செய்ய முடியாது என முடிவு எடுத்துவிட்டோம். எனவே, தமிழ் மக்கள் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்." - என்றார்.