Friday, October 9, 2026

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு


2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, ஜனவரி 1ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 18ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 14,68,980 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இதனிடையே, ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையான 18 நாட்களில் மாத்திரம் 1,25,562 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஆகஸ்டில் இந்திய சுற்றுலாப் பயணிகளே அதிகம்

ஆகஸ்ட் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாவர். அவர்களின் எண்ணிக்கை 27,884 ஆகப் பதிவாகியுள்ளது.

இரண்டாவது இடத்தில் பிரித்தானியா காணப்படுவதுடன், அந்நாட்டிலிருந்து 13,980 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மூன்றாவது அதிகளவான சுற்றுலாப் பயணிகள் பிரான்ஸிலிருந்து வருகை தந்துள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 8,776 ஆகும்.

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியிலும் இந்தியா முன்னிலை

2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடாக இந்தியா தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளது.

அதன்படி, இந்த ஆண்டில் இதுவரை 3,66,114 இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதேவேளை, 1,44,381 சுற்றுலாப் பயணிகள் பிரித்தானியாவிலிருந்தும், 97,073 சுற்றுலாப் பயணிகள் சீனாவிலிருந்தும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

பெப்ரவரியில் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள்

2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஒரே மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த மாதமாக பெப்ரவரி பதிவாகியுள்ளது.

அந்த மாதத்தில் மொத்தம் 2,79,328 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

you may also like