Saturday, October 10, 2026

அநுரவின் ஆட்சிக்கு சவால் விடுகிறதா முன்னாள் எம்பிக்கள் குழு? கூட்டு சேர்ந்து அனுப்பப்பட்ட விசேட கடிதம்


‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’ என்ற தலைப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே தொடர்பாக சமூகத்தில் எழுந்துள்ள கவலைகள் மற்றும் அவர் கொடூரமான முறையில் நடத்தப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், தடுப்புக் காவலில் இருந்த ஜே.வி.பி.யின் ஸ்தாபகர் ரோஹண விஜேவீர படுகொலை செய்யப்பட்டதுடன், உயிர் பிரிவதற்கு முன்னரே மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் கடந்தகால சம்பவங்களை நினைவுகூர்ந்து, அவ்வாறான மனிதாபிமானமற்ற நிகழ்வுகள் மீண்டும் இந்த நாட்டில் இடம்பெறக் கூடாது என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி முன்னிலையில் உள்ள அனைத்து விடயங்களையும் பாரபட்சமின்றி ஆராய்ந்து, முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலேவையும் ஒரு சாதாரண சந்தேகநபராகக் கருதி, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கைக்கு அமைவாக அவருக்குரிய உரிமைகள் மற்றும் நீதியை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, சட்டத்தரணி டிலான் பெரேரா, டி.பி. ஹேரத், கலாநிதி குணபால ரத்னசேகர, கரு கொடித்துவக்கு, வைத்தியர் திலக் ராஜபக்ஷ, வைத்தியர் உபுல் கலப்பத்தி, லலித் எல்லாவல மற்றும் கே.பி.எஸ். குமாரசிறி ஆகியோர் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளனர்.


you may also like