Thursday, October 8, 2026

உரலார் கேள்வியும் உலக்கையார் பதிலும் - 70


- கம்பவாரிதி இ. ஜெயராஜ்-

1. உரலார் கேள்வி :-

யாழ்ப்பாணத்தில் பெற்ற தாயின் கழுத்தில் மிதித்துக் கொன்ற பாதகன் பற்றி விவரம் அறிந்தீர்களா?

உலக்கையார் பதில் :-

​விலங்குகள் கூடச் செய்யத் துணியாத காரியம். இக் காரியத்தைச் செய்தவன் புத்திசுவாதீனம் அற்றவன் என்று சொல்கிறார்கள். ஆயிரந்தான் புத்தி குழம்பியிருந்தாலும் இத்தகைய பாதகச் செயலை ஒருவனால் செய்ய முடியுமா? என்று எண்ணத் தோன்றுகிறது.

வெளிநாட்டு மோகம், போதைவஸ்துப் பாவனை, பணத்திமிர் என்பனவான பல சைத்தான்கள் போருக்குப் பின் யாழ்ப்பாணத்துக்குள் புகுந்திருக்கின்றன. அதனால் யாழ்ப்பாணம் சமநிலை கெட்டுப்போய் இருக்கிறது. அதனால் இன்னும் இப்படிப்பட்ட கொடூரமான செய்திகளை நாம் கேட்க வேண்டிவருமோ என அஞ்சுகிறேன்.

நம் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்வோருக்கு இது பற்றியெல்லாம் எந்தக் கவலையுமில்லை. ஒன்று யார் தலைவர் என்று அடிபடுகிறார்கள், அல்லது யார் பொது வேட்பாளர் என்று முட்டிக் கொள்கிறார்கள். நெஞ்சு பதறும் இத்தகைய செய்திகள் எல்லாம் அவர்களின் காதுகளுக்குள் நுழைவதில்லைப் போல் தெரிகிறது. அறம் கூற்றாகிறபோதுதான் இவர்களின் அரசியல் கூத்துகள் நிற்கும் என்று நினைக்கிறேன்.

சல்லடையார் சலிப்பு :-

தலைக் கிடாய்கள் பிழைக்கிடாய்கள் ஆனால், சமூகம் இப்படித்தான் போகும் பாருங்கோ!

2. உரலார் கேள்வி :-

பட்டம்பெற்ற பலரும் வெளிநாடுகளுக்கு ஓடத் தொடங்கியிருக்கிறார்களாமே? என்னாகப் போகிறது நம் நாடு?

உலக்கையார் பதில் :-

யாழ். வைத்தியசாலை வைத்தியநிபுணர் ஒருவரை நேற்றுச் சந்திக்க நேர்ந்தது. டாக்டர்களின் வெளியேற்றம் பற்றிப் பதற்றத்தோடு அவர் பேசினார். இதே போக்கில் போனால் வைத்தியசாலை நிர்வாகம் ஸ்தம்பிக்கவேண்டி வரலாம் என்ற தனது அச்சத்தை வெளியிட்டார்.

பல விதத்தாலும் நம் மண் ஆபத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அவற்றைத் தடுக்க வல்ல இரட்சகர்கள் ஒருவரையும் காணமுடியவில்லை. நானும் வாயோயாமல் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். அதுபற்றி யாரும் கவலைப்படுவதாய்த் தெரியவில்லை.

ஒரு மருத்துவரை உருவாக்க அரசாங்கம் எவ்வளவோ பணம் செலவழிக்கின்றது. அது பற்றிய எந்த நன்றியுணர்வும் இல்லாமல் படித்து முடித்ததும் சொந்த மண்ணிற்கு 'டாட்டா' காட்டிவிட்டுப் பணம் சம்பாதிக்கவெனப் பல நாடுகளுக்கும் அவர்கள் பாய்ந்துவிடுகிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு?

மண்ணிற்காக உயிர் துறந்த இளைஞர்களோடு, தியாக உணர்வும் நம் மண்ணை விட்டுப் போய் விட்டது போல் படுகிறது. உடல், பொருள், ஆவி என்ற அத்தனையையும் இனத்திற்காக இழந்து நின்ற இளையோரைக் கண்ட பிறகும் இவர்களால் எப்படித்தான் இப்படி நடக்க முடிகிறதோ? தெரியவில்லை. உண்மையில் இவர்கள் செய்வதும் தேசத்துரோகம் தான் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

'நன்றாற்றலிலும் தவறுண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றாக் கடை' என்றார் வள்ளுவர். தேசப்பற்றில்லாத இந்தப் புதிய தலைமுறைக்கு வரம்பிட வேண்டிய காலம் வந்துவிட்டதென்றே நினைக்கிறேன். இனி வரும் காலத்தில் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் போது நிபந்தனையாக, 'படித்து முடித்ததும் ஐந்து ஆண்டுகளுக்கு வெளிநாடு செல்லமாட்டோம்!' எனும் உறுதி மொழியைச் சட்டபூர்வமாக வாங்க வேண்டும். அத்தோடு இவர்களுக்காகச் சொத்துக்கள் உள்ள இருவர் 'கரண்டி' தந்து கையெழுத்திடவேண்டும்.

அந்த ஐந்து ஆண்டுகளுக்குள் அவர்கள் இரகசியமாக வெளிநாடு செல்வார்களாயின் அவர்களுக்கு இருக்கக் கூடிய சொத்துகளையும், அவர்களுக்காகக் 'கரண்டி' கையெழுத்திட்டவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். இப்படி ஏதாவது கடுமையான நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்க வேண்டிய காலம் வந்து விட்டது என்றே கருதுகிறேன்.

சல்லடையார் சலிப்பு :-

தேசம் மறந்திவர் மோசம் செய்கிறார்.

3. உரலார் கேள்வி :-

என்ன? ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது போலத் தெரிகிறதே?

உலக்கையார் பதில் :-

நம்மவர்களுக்குள் நடக்கும் சண்டைக்கு அப்பால் வெளிநாட்டுத் தூதுவர் பலரும் உட்புகுந்து 'செஸ்' விளையாடத் தொடங்கியிருக்கிறார்கள். எந்தக் காய் வெட்டுப்படப் போகிறதோ? யார் யாருக்குச் 'செக்' வைக்கப் போகிறார்களோ என்பதெல்லாம் இனி இனித்தான் தெரிய வரும்.

இந்த விளையாட்டிலாவது நம் தமிழ்த் தலைவர்கள் சரியான முறையில் காய் நகர்த்துவார்களா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. இனப்பற்றைப்பற்றி வாய் கிழியப் பேசிவிட்டு இனத்தைப் படுகுழிக்குள் தள்ளுவதே இவர்களின் வேலையாய் இருப்பதால் பெரும்பாலும் அதற்கான வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

சல்லடையார் சலிப்பு :-

பேரம் பேசத் தெரியாமல் வீரம் பேசினால் சோரம் போக வேண்டியதுதான். ஹி.ஹி.ஹி....!

4. உரலார் கேள்வி :-

முன்னாள் முதலமைச்சருக்காக ஒரு காலத்தில் உங்களோடு மோதிய 'வலம்புரி' பத்திரிகை ஆசிரியரே இப்போது வெளிப்படையாக அவரைக் கண்டித்து ஆசிரியர் தலையங்கம் எழுதியிருக்கிறாராமே?

உலக்கையார் பதில் :-

இவர்கள் எல்லோரும் என்னை ஓர் தீர்க்கதரிசியாக உணர வைக்கிறார்கள். முதன் முதலில் மு.முதலமைச்சரின் போக்குச் சரியில்லை என்று நான்தான் எழுதினேன். அப்போதெல்லாம் பலரும் என்மேல் குற்றம் சாட்டினார்கள். காலம் அவர்களுக்கு அவரின் உண்மை முகத்தைக் காட்டியிருக்கிறது. இன்னும் கூட அவரிடம் ஏமாறத் தயாராய்ச் சிலபேர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏமாளிகள்!

வலம்புரி ஆசிரியர் மொழிப்பற்று, சமயப்பற்று, தேசப்பற்று என்பவற்றில் உண்மைப்பற்றுக் கொண்டிருப்பவர். அதனால்தான் அவர் இந்த மனிதரிடம் ஏமாந்து போனார். நீதித்துறையில் இருப்பவர்கள் எல்லாம் உண்மையான நீதிமான்கள் இல்லையென்பதையும், விபூதி பூசியவர்கள் எல்லாம் உண்மைச் சமயவாதிகள் இல்லை என்பதையும், வேட்டி உடுத்தவர்களெல்லாம் உண்மைத் தமிழ்ப் பற்றாளர்கள் இல்லை என்பதனையும் இப்போதுதான் அவர் தெரிந்து கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்.

அதுகூடத் தவறு! 'அரசியல் தொடர்பு படாமற்தான் இயங்குவோம்' என்ற இலட்சியத்துடன் இருந்த, 'தமிழ் மக்கள் பேரவையின்' கூட்டத்தில் வைத்தே என்றைக்குத் தனது கட்சியை மு.முதலமைச்சர் ஆரம்பித்தாரோ அன்றைக்கே வலம்புரியாருக்கு இவரது உண்மை முகம் விளங்கியிருக்கும். இன்றைக்குத்தான் அவரது மனக் கொந்தளிப்பு எழுத்தாய் வெடித்திருக்கிறது.

'தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்'தான் என்று பிடிவாதம் பிடிக்காமல், தான் தவறியதை ஒத்துக் கொண்டு, தான் உணர்ந்த உண்மையை உலகிற்குத் துணிவாய் அறிவித்து, 'வலம்புரியார்' தன்னை ஒரு நேர்மையான பத்திரிகையாளனாய் நிறுவியிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள்!

சல்லடையார் சலிப்பு :- அதென்ன மு.முதலமைச்சர்? வாரிதியார் எதாவது குசும்பு விடுகிறாரோ?

5. உரலார் கேள்வி :-

மாண்புமிகு ஜனாதிபதி ரணிலின் யாழ்ப்பாண விஜயம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

உலக்கையார் பதில் :-

நினைப்பதற்கு என்ன இருக்கிறது? தெற்கில் கிடைக்காது என்று தெரிந்த விடயத்தை வடக்கில் தேட முற்படுகிறார். வடக்கும் அவருக்குக் கைகொடுக்கும் என்று தோன்றவில்லை. இளைஞர்களைப் பாட்டுப்பாடவும் அனுமதித்து அவர் நடாத்திய கூட்டங்கள் தமிழ் மக்கள் நோக்கிப் போட்ட தூண்டில்கள். இங்கு அந்த முள்ளில் எந்த மீனும் சிக்கப் போவதில்லை என்றே படுகிறது.

ஆரைப்பிடித்தால் தன் காரியத்தைச் சாதிக்கலாம் என அறிந்து மு.முதலமைச்சரைச் சந்தித்திருக்கிறார். பாம்பின் கால் பாம்பறிவதில் என்ன விந்தை இருக்கப்போகிறது? அவரும் இவருக்கான 'சிக்னல்' காட்டியிருக்கிறார்.

சல்லடையார் சலிப்பு :-

சகுனியரின் கூட்டு சரி வராது பாருங்கோ!

you may also like