- by Editor
- 1 year ago
அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு
-
- by Editor,
- 3 weeks ago
- in இலங்கை செய்திகள்
வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தும்புர போகம்பறை சிறைச்சாலை மற்றும் பல்லேகலை திறந்தவெளி சிறைச்சாலையை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்டுள்ள கூட்டுப் பொறிமுறையின் கீழ், தும்புர சிறைச்சாலை அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பான கோரிக்கைகள் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள் ஆற்றிவரும் முக்கியமான சேவையை கருத்திற்கொண்டு, அவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளேன்” என அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறைச்சாலைத் திணைக்களத்தில் கணிசமான எண்ணிக்கையிலான பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், சிறைச்சாலை அதிகாரிகள் ஆற்றும் சேவையை பண மதிப்பில் அளவிட முடியாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமடைவதன் காரணமாக சந்தேகநபர்கள் மூன்று மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்படும் நிலையைத் தவிர்ப்பதற்கான திட்டமொன்று அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் திகதிக்குள் தயாரிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அணுகுமுறை முன்னெடுக்கப்பட்டாலும், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவித சலுகையும் வழங்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“போதைப்பொருள் விநியோகத்தை நிறுத்த எம்மால் முடியும். ஆனால், போதைப்பொருளுக்கான தேவையை இல்லாதொழிக்க சமூகத்தின் ஆதரவு அவசியம்” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரப் பிரச்சினைகள் காணப்பட்டாலும், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறைச்சாலைச் சேவை கௌரவமான ஒரு தொழில் எனக் குறிப்பிட்ட அமைச்சர், அதன் கண்ணியத்தைப் பாதுகாத்து செயற்படுவது சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார். எந்தவொரு தனிப்பட்ட ஆதாயத்திற்காகவும் மற்றொரு மனிதனின் உயிரை அழிக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது, வழக்கு விசாரணைகளுக்காக கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும் போது அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், கைதிகள் மற்றும் அதிகாரிகளின் நலன்புரி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், சிறைச்சாலையின் நிலைமையை அமைச்சர் நேரில் பார்வையிட்டதுடன், கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் அவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
சிறைச்சாலைகளுக்குள் மோதல் நிலைமைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உடனடியாகச் செயற்படுவதற்கும், கைதிகளின் நலன்புரி நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்கும் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளையும் அடிப்படையாகக் கொண்டு கூட்டுப் பொறிமுறைகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.