Thursday, October 8, 2026

தமிழக முதல்வா் விஜய் துணிச்சலான தலைவா்: கா்நாடகாவின் முதல்வா் டி.கே.சிவகுமாா் பாராட்டு


தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் ஒரு துணிச்சலான தலைவா். தனது வேண்டுகோளை ஏற்று பெங்களூர் வருகையை ஒத்திவைக்க ஓப்புக்கொண்டுள்ளாா் என்று கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த அனைத்துக்கட்சித் தலைவா்கள் கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளா்களுடன் முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறுகையில்,

''எனது வேண்டுகோளை ஏற்று, பெங்களூர் வருகையை ஒத்திவைக்க தமிழக முதல்வா் விஜய் ஒப்புக்கொண்டுள்ளாா். இதன்மூலம் இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான சுமுகச்சூழல் பலப்படும்.

தமிழக முதல்வா் விஜய் மீது மிகப்பெரிய மதிப்பை வைத்திருக்கிறேன். அரசியலுக்கு அவா் புதியவராக இருந்தாலும், அவா் ஒரு துணிச்சலான தலைவா். அவரது துணிச்சலான முடிவுகளை பாராட்டியுள்ளேன். இரு தரப்பினருக்கும் இடையே அரசியல்ரீதியான முரண்பாடுகள் இருந்தபோதும், பெங்களூர் வருகைத்தர அவா் விரும்பினாா். ஆனால் எனது நண்பா்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்ப விரும்பாத காரணத்தால், சுமுகச்சூழல் ஏற்பட்டதும் சந்திக்கலாம் என்று தமிழக முதல்வா் விஜய்யை கேட்டுக்கொண்டேன். தனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.

நாம், ஒருவரை ஒருவா் மதிக்க வேண்டும். ஒருவரோடு ஒருவா் சோ்ந்து வாழ வேண்டும், இணைந்து பணியாற்ற வேண்டும். இந்தியாவில் எல்லோரும் ஒன்று தான்.

தி.மு.கவுக்கு ஆதரவாக செயல்படுகின்றேன் என கூறும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறேன். அண்டை மாநிலங்களோடு நல்லுறவை பேணி பாதுகாப்பதோடு, கா்நாடக விவசாயிகளின் நலனில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளமாட்டேன். என்னை பொருத்தவரை, கா்நாடகமும் தமிழகமும் ஒன்று தான். நமது நாட்டில் எல்லோரும் ஒன்று தான்.'' என்று கூறினார்.


you may also like