- by Editor
- 2 years ago
இரகசியம் - பரகசியம் (31.05.2024)
தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தன் நேற்று சுமந்திரன் எம்.பியைத் தமது கொழும்பு இல்லத்துக்கு அழைத்து உரையாடியிருக்கின்றார்.
ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடக்கூடிய தென்னிலங்கைப் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுடன் ஏதேனும் உரையாடல்கள் நடத்தினீர்களா, அவை தொடர்பில் ஏதேனும் தகவல் உண்டா என்று கேட்டார் சம்பந்தன். அந்த விடயங்களை ஊன்றிக் கவனிக்கும்படி சுமந்திரனைக் கேட்டுக் கொண்டார் என்றும் தெரிகிறது.
இலங்கை தமிழரசு கட்சியின் வழக்கு இன்று. அது குறித்தோ அல்லது பொது வேட்பாளர் பேச்சுக் குறித்தோ ஏதும் சம்பந்தன் வினாவினாரா என்று சுமந்திரனைக் கேட்டேன்.
''ஐயா அந்த விடயங்கள் குறித்து எதுவும் கேட்கவும் இல்லை, பேசவும் இல்லை. ஜனாதிபதி தேர்தல் விடயங்களைக் கையாள்வது பற்றியே குறிப்பிட்டார்'' என்றார் சுமந்திரன்.
***
அரசியல் பதவிகளில் இருப்போரின் வாய்ச்சொல் பேச்சுக்கு கட்டுப்பட்டு, முறைகேடாக நடந்து கொள்ளும் அரசு அதிகாரிகள் கடைசியில் தாங்கள்தான் அதற்கான வினைகளை - தொல்லைகளை - அனுபவிக்க நேரிடும் என்பதை ஏனோ மறந்து விடுகின்றார்கள். அதனால்தான் இந்த பாவக்கதை சோகக் கதையாகத் தொடர்கின்றது.
அது பற்றிய ஒரு சோகக் கதை விடயம் இப்போது பேசு பொருளாகி இருக்கின்றது.
ஒரு கியூப் ஆற்று மணல் என்ன விலை போகின்றது என்பது எல்லோருக்கும் தெரியும். அது இடத்துக்கு இடம் கொள்ளை விலைக்குப் போகின்றது.
வெளியில் அந்த விலை என்றால், அரசு சொத்தான மணலை கொள்ளை போகும் அறாவிலைக்கு விற்ற ஓர் அதிகாரி இப்போது மாட்டிக் கொண்டு முழிக்கிறார்.
கிளிநொச்சி அக்கராயனில் ஆறு ஒன்று புனரமைக்கப்பட்ட போது அள்ளப்பட்ட மணலை அரசியலில் - அரசுப் பக்கத்தில் - பதவி வகிப்பவரின் அழுத்தம் காரணமாக அவருக்கு வேண்டப்பட்டவருக்கு அரச நடைமுறை விதிகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு, சட்ட விரோதமான முறையில், ஒரு கியூப் மணல் ஆக 250 ரூபா என்று அடிப்படையில் 342.76 கியூப்பையும் விற்றிருக்கின்றார் பிரதேச சபையின் செயலாளர்.
அது பற்றி விசாரணை நடத்திய கணக்காய்வு அலுவலகம் ஒரு கியூப்புக்கு ஆக 12 ஆயிரம் ரூபா என்று கணக்கிட்டு, அந்த அடிப்படையில் சபைக்கு 40 லட்சத்து 27 ஆயிரத்து 430 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டு, அதற்குப் பொறுப்புக் கூறுமாறு பிரதேச செயலரை மாட்டி உள்ளது.
இனி என்ன? அரசியல்வாதிகளினதும், அவர் வழியில் மேலதிகாரிகளினதும் வாய்ச்சொல் அழுத்தத்திற்குப் பணிந்த பிரதேச செயலர் இனி 40 லட்சம் ரூபாவைத் தன் மடியில் இருந்துதான் போட்டுக் கட்ட வேண்டும். நல்லவேளை கியூப் 12 ஆயிரம் ரூபா என்று கணக்கிட்டமையால் இந்த அளவோடு போட்டுக் கட்ட வேண்டிய தொகை முடிந்தது என அவர் மன ஆறுதல் பட வேண்டியதுதான்....!
எழுத்தில் இல்லாத - முறையற்ற - உத்தரவுகளுக்கு அடி பணிந்தால் இப்படித்தான் நேரிடும் என்பதை அரசு அதிகாரிகள் புரியாத வரையில், அவர்கள் தமது எதிர்காலத்தை தாங்களே நெருக்கடியில் மூழ்கடிக்க வேண்டித்தான் இருக்கும்.