- by Editor
- 2 years ago
இரகசியம் - பரகசியம் (28.02.2024)
'சாண் ஏற முழம் சறுக்கும்' என்பார்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வழக்கு, அதற்கு இணக்கத் தீர்வு காணும் முயற்சி எல்லாம் இப்படி சாண் ஏற முழம் சறுக்கும் என்ற நிலைமையில்தான் சிக்கிக் கொண்டுள்ளன. தமிழர்களின் பரிதாபம் அதுதான். காலமும் - காலனும் - காலை இடற முனைப்பாகவே உள்ளனர்.
ஏற்கனவே இந்த வழக்குப் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்கும் முயற்சி திருகோணமலை ஆயர் முன்னிலையில் இரண்டொரு தினங்களுக்கு முன்னர் நடந்தமை குறித்து என் பத்தியில் பிரஸ்தாபித்திருந்தேன். திருகோணமலையில் வழக்குத் தொடர்ந்த உறுப்பினரை அழைத்து, திருகோணமலை ஆயர், திருகோணமலை பொறியியலாளர் தவசிலிங்கம், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் மட்டக்களப்பு மேயர் சரவணபவன், கட்சியின் இதுவரை காலத்துக்குமான பதில் பொதுச் செயலாளராக இருந்த மருத்துவர் சத்தியலிங்கம் ஆகியோர் கலந்துரையாடியிருந்தனர்.
பூர்வாங்க இணக்கத்திற்கான சூழ்நிலை காணப்பட்ட போதிலும், சர்ச்சையில் சம்பந்தப்பட்ட பிரதான தரப்புகள் அந்தச் சந்திப்பில் நேரடியாகப் பங்குபற்றாத நிலையில் அந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்நகர்வு இருக்கவில்லை. விடயம் தேங்கி நின்றது.
இந்தப் பின்புலத்தில் நேற்று யாழ்ப்பாணத்தில் ஒரு காத்திரமான முயற்சி எடுக்கப்பட்டது. பெரும்பாலும் ஒரே அமுக்கில் பிரச்சினையைத் தீர்த்து விடலாம் - இணக்கத்தை ஏற்படுத்தி, விடயத்தை இனி சுமுகமாக முன் நகர்த்தலாம் - என்ற நம்பிக்கை இந்த யாழ் முயற்சியில் முழுமையாக இருந்த போதிலும், காலன் வந்து கடைசி நேரத்தில் குழப்பி விட்டான்.அதனால்தான் சாண் ஏற முழம் சறுக்கியது என்றேன்.
நேற்றைய யாழ் முயற்சிக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஊடகவியலாளர் cum ஊடக முதலாளி.
யாழ் மதத் தரப்புகளை - தலைவர்களை - பார்த்து இந்தப் பிரச்சினையை இப்படியே நீடிக்க பார்த்து இருக்கப் போகின்றீர்களா என அவர் உரிமையுடன் கடிந்து கொண்டமையால் இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டது என்பதை உறுதியாக என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.
தமிழரசின் இப்போதைய சர்ச்சை நிலைமையை பொறுத்தவரை அந்த ஊடகவியலாளர் cum ஊடக முதலாளி 'பாட்டும் நானே; பாவமும் நானே' என்ற காரண காரிய கர்த்தா என்பது வேறு விடயம்.
ஆனால் அவர் கொடுத்த சூட்டில்தான் நேற்றைய சமரச சந்திப்புக்கு ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டு இணக்கம் காணப்பட்டது.
நேற்று இரவு எட்டு முப்பது மணிக்கு நல்லை ஆதீனத்தில் சந்திப்பு என்பது ஏற்பாடு. நல்லைக் குரு மகா சந்நிதானம், யாழ் ஆயர், செஞ்சொற்செல்வன் ஆறு.திருமுருகன் ஆகிய மூவரோடு சிறீதரன் எம்.பியும் சுமந்திரன் எம்.பியும் நேரடியாகச் சந்திப்பது என்று இணக்கம். ஐவரும் சந்திப்புக்கு உடன்பட்டிருந்தனர். இன்று காலைப் பத்திரிகைக்கு இணக்கம் பற்றிய தலைப்புச் செய்தி போடலாம் என்று நானும் காத்திருந்தேன்.
ஆனால் இடையில் காலன் புகுந்து விளையாடி விட்டான். தெஹிவளையில் சுமந்திரனின் தாயார் நேற்று பிற்பகல் திடீரென உலகை விட்டுப் பிரிய, உடன் கொழும்பு விரைய வேண்டியவரானார் சுமந்திரன். நேற்றிரவு நடக்க வேண்டிய சந்திப்பு பிற்போட வேண்டியதாயிற்று. சந்திப்பு நடந்திருந்தால் நல்லை ஆதீனம், யாழ் ஆயர், ஆறு.திருமுருகன் ஆகியோர் பக்கத்தில் நிற்க, சுமந்திரனும் சிறீதரனும் கை கொடுத்து ஊடக அறிவிப்பு வெளியிட்டிருப்பர் என்று நான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால், சாண் ஏற, முழம் சறுக்கி விட்டது.
நாளை திருகோணமலையிலும், யாழ்ப்பாணத்திலும் வழக்குத் தவணை. சம்பந்தப்பட்ட தரப்புகள் இடையே இணக்கமாக விடயத்தைத் தீர்க்கக்கூடிய மனப்பதிவு - மனப்படிவு - நிலவுகின்றமையால் நாளைய வழக்குத் தவணையில் எதிரெதிர் தரப்புக்கள் ஆக்ரோஷமாக மோதும் சூழல் காணப்படாது என்றும், தரப்புக்கள் தவணைக்காகத் திகதி கேட்டு, விடயத்தை ஒத்திப் போடும் முயற்சியில் ஈடுபடலாம் என்றும் எதிர்பார்க்க முடியும்.
ஆயினும், வழக்குகளின் எதிராளிகள் தரப்பின் சட்டத்தரணிகள் கட்சிக்கும், நிர்வாகிகளுக்கும் விதித்த இடைக்காலத் தடையை நீக்கும்படி கோரி பூர்வாங்க வாதத்தை நாளை முன்வக்க முயலலாம். அதைத் தவிர்க்கும்படி கோரவோ, தவறு என்று கூறவோ முடியாது.
சமரச இணக்க முயற்சியில் மட்டுமல்ல, வழக்கு விடயத்திலும் விவகாரம் சாண் ஏற முழம் சறுக்கும் நிலைமை உண்டு. பெரும்பாலும் அது குறித்து நாளை வழக்குத் தவணைக்கு முன்னர் விவரம் தருவேன். அதுவரைப் பொறுத்தருள்க.
***
உயர்நீதிமன்றத்தின் நீதியரசர்கள் முக்கிய வழக்குகளை எட்டுப் பத்து நாள்களாக விசாரணை செய்துவிட்டு, காரணமே கூறாமல், விளக்கம் குறிப்பிடாமல், மனு விசாரணைக்கு ஏற்கப்படாமல் நிராகரிக்கப்படுகின்றது என்று ஒற்றை வரியில் தீர்ப்பளிப்பது போன்ற விடயங்களை அண்மைக் காலத்தில் என் பத்தியில் பெரும் குறையாகச் சுட்டி காட்டி வருகிறேன்.
அந்த வரிசையில், ஒரு வழக்கை விசாரித்து முடித்து ஒன்றரை வருட காலத்தின் பின்னரும் தீர்ப்பை வெளியிடவில்லை, இப்போது விசாரித்த பல வழக்குகளில் தீர்ப்பை - முடிவை - வெளியிடாமல் நீதியரசர் ஓய்வு பெற்றுச்ச் சென்றால், அத்தகைய வழக்குகளை மீளவும் ஆரம்பத்தில் இருந்து விசாரிக்கும் கட்டாயம் ஏற்படும் என்பவை பற்றியெல்லாம் நேற்று என் பத்தியில் பிரஸ்தாபித்திருந்தேன். வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
நேற்று இரவு 10:50 மணி அளவில் நமது ஆசிரிய பீட செய்தி மின்னஞ்சலுக்கு ஒரு கடிதம் வந்தது. அதை வரைந்த அன்பர் நிச்சயம் ஒரு சட்டத்தரணியாக இருப்பார் என்று நினைக்கிறேன். அவரின் பெயர் எனக்கு மிகவும் அறிமுகமானது போல இருந்தாலும், அந்த மின்னஞ்சலைத் திறந்து வாசித்த போது அவரை என்னால் நினைவுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
அவர் அனுப்பிய செய்தி மிக உரிமையுடன் பின்வருமாறு இருந்தது:-
இன்று நீங்கள் எழுதியுள்ள 'இரகசியம் பரகசியம்' பத்தி கௌரவ நீதிமன்றின் மாண்பையும் அதன் மீது மக்கள் கொண்டுள்ள மரியாதையையும் மலினப்படுத்தும் வகையில் காணப்படுவதால் உங்களை ஏன் 2024 CONTEMPT OF A COURT, TRIBUNAL OR INSTITUTION ACT, No. 8 OF 2024 சட்டத்தின் கீழ் தண்டிக்கக் கூடாது என்பதற்கு ஏதாவது காரணம் இருந்தால் நாளைய பத்திரிகையில் வெளியிடுமாறு தேவைப்படுத்தப்படுகிறீா்கள்.
உங்களின் உசாத் துணைக்காக குறித்த சட்டத்தின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது.
இங்ஙனம்,
உங்கள் வாசகா்களில் ஒருவன்.
- மிக கௌரவமாக, மதிப்பாக அதே நேரம் சட்டக்கடப்பாட்டை உணர்த்தும் விதத்தில், அவரது அஞ்சல் அமைந்திருந்தது. அதை வாசித்த கையோடு, ஒரு ஐந்து - பத்து நிமிடத்தில், என் பதிலை அனுப்பி வைத்தேன். அது பின்வருமாறு அமைந்தது:-
முதலில் நன்றி.
உங்களை யார் என்று எனக்குத் தெரியவில்லை.
எனினும் தாராளமாக முயற்சியுங்கள்.
இல்லாவிட்டால் சம்பந்தப்பட்டோரை முயற்சிக்கச் சொல்லுங்கள்.
யாராவது பூனைக்கு மணிகட்டியாக வேண்டும்.
கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும்.
ஒரு தடவை விக்டர் ஐவனின் 'Unfinished Struggle - For the Independence of the Judiciary’ புத்தகத்தை வாசியுங்கள். அதைத் தொடர வேண்டிய தேவையுள்ளது.
நீதித் துறையில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். சிறப்புரிமைகளுக்குப் பின்னால் பதுங்கி, நீதி தவறி, தவறிழைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. பொறுப்புக் கூறல் கடப்பாடு எல்லோருக்கும் உண்டு. எனக்கும்தான்.
இவ்விடயத்தை யாராவது கவனித்துத் தீர்வு பெற்றுத் தரமாட்டார்களா என்று பார்த்திருக்கிறேன்.
நான் எழுதியவை நீங்கள் குறிப்பிட்டபடி 'கௌரவ நீதிமன்றின் மாண்பையும் அதன் மீது மக்கள் கொண்டுள்ள மரியாதையையும் மலினப்படுத்தும் வகையில் காணப்படுகின்றதா' என்பதைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றத்தினுடையது.
தயவு செய்து அதைச் செய்யச் சொல்லுங்கள். விசாரித்தால் பல விடயங்களை வெளியே கொண்டு வரலாம்.
சட்டம் எனக்கும் தெரியும்.
அன்புரிமையுடன்.
- இவ்வாறு பதிலை நான் அனுப்பிய ஐந்தாறு நிமிடங்களில் அவரிடமிருந்து மீளவும் பதில் வந்தது. அது பின்வருமாறு:-
சுடச்சுட பதிலனுப்பியமைக்கு நன்றி. மனதில் பட்டதை எழுதினேன். இவ்வளவு துணிச்சலான பதில் வரும் என எதிா்பாக்கவில்லை.
- இப்படி தெரிவித்து இருந்தார் அந்த நண்பர். என் எழுத்திலும் எங்கள் பத்திரிகையிலும் அவ்வளவு சிரத்தையாக - அவதானிப்பாக - இருக்கும் அன்பர்களின் இத்தகைய பிரதிபலிப்புகள்தான் எங்களை எழுதத் தூண்டும் டொனிக். அவர் போன்ற உரிமையுடன் கூடிய அன்பு உள்ளங்களுக்கு நன்றி. சிரம் தாழ்த்திய வணக்கம்.