Tuesday, October 13, 2026

சிவராசா அனோஜன் விவகாரம் - இன நல்லுறவைப் பாதிக்கும் முகநூல் பதிவுகள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை


சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவருடன் தொடர்புடைய தேவையற்ற முகநூல் பதிவுகள் மற்றும் முரண்பாடான கருத்தாடல்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப் பொலிஸார் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.

கல்முனை பொலிஸ் பிரிவில் வசித்து வந்த சிவராசா அனோஜனை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம், சிவில் அமைப்புகள் மற்றும் சர்வதேசப் பொது அமைப்புகள் ஊடாகப் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, இலங்கையில் வாழும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களிடையே இன வேறுபாடுகளைக் கடந்து ஆதரவு வெளிப்படுத்தப்பட்டு வருவதுடன், சவூதி அரேபியாவுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர ரீதியிலான முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான முயற்சிகள் தொடரும் சூழலில், சிலரால் சமூக வலைத்தளங்களிலும் பொதுவான கலந்துரையாடல்களிலும் வெளியிடப்படும் கருத்துகள் இன நல்லுறவைப் பாதிக்கும் வகையில் அமைவதாகக் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்த விவகாரம் தொடர்பில் அவதூறான கருத்துகளை வெளியிடுதல், விஷமத்தனமான கருத்துகளைப் பரப்புதல் மற்றும் இன நல்லுறவைப் பாதிக்கக்கூடிய முகநூல் பதிவுகளைப் பகிர்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி இந்த விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

you may also like