Friday, October 9, 2026

எல்ல நகரத்திற்குப் புதிய நுழைவாயிலாக சுரங்கப் பாதை அமைக்கும் திட்டம்


எல்ல பிரதேசத்தின் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 1,000 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பல பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

எல்ல “Waterfall Road” வீதியை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுமார் 26 ஆண்டுகளாக புனரமைக்கப்படாமல் இருந்ததுடன், அதிகளவான சுற்றுலாப் பயணிகளால் பயன்படுத்தப்பட்டு வந்த குறித்த வீதி, கொங்கிரீட் இட்டு புனரமைக்கப்பட்டதன் பின்னர் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 500 மில்லியன் ரூபாய் செலவில் துன்ஹிந்த – பல்லகெட்டுவ – தெமோதர வீதியும், 370 மில்லியன் ரூபாய் செலவில் எல்ல – பசறை வீதியும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், கந்தேகும்புற வீதியை 270 மில்லியன் ரூபாய் செலவிலும், பியரபந்தோவ வீதியை 59 மில்லியன் ரூபாய் செலவிலும் அபிவிருத்தி செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு மேலதிகமாக, எல்ல நகரத்தின் சுற்றுலா ஈர்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் பல புதிய திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எல்ல நகரத்திற்கான புதிய நுழைவாயிலாக சுரங்கப் பாதையொன்றை அமைப்பதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நகர மத்தியில் அமைந்துள்ள 2.5 ஏக்கர் RDA காணியை, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் 50 மில்லியன் ரூபாய் ஆரம்ப நிதி ஒதுக்கீட்டின் கீழ் நவீன சுற்றுலா வளாகம், வர்த்தக மையம் மற்றும் கண்காட்சி அரங்கு உள்ளிட்ட வசதிகளுடன் அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

you may also like