Friday, October 9, 2026

இரகசியம் - பரகசியம் (25.01.2026)


இலங்கைத் தமிழரசு கட்சியின் அரசியல் குழு நேற்று திருகோணமலையில் 'மரதன்' கூட்டம் ஒன்றை நடத்தி இருக்கிறது. மாலை 4.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் 8.30 மணி வரை நீடித்தது.

அரசமைப்புக் கவுன்ஸில் உறுப்பினர் பதவியில் இருந்து விலகுமாறு இலங்கைத் தமிழரசு கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிறிதரனுக்கு பணிப்புரை வழங்கி அரசியல் குழு கடந்த வவுனியாக் கூட்டத்தில் தீர்மானித்த நிலையில், அதன் தொடர்ச்சியாக நேற்றைய கூட்டம் இடம்பெற்றது.

அரசமைப்புக் கவுன்ஸில் உறுப்பினர் பதவியில் இருந்து சிறிதரனை விலகச் சொல்லும் வற்புறுத்தல் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பான்மையான உறுப்பினர்களால் சிறிதரனுக்கு கொடுக்கப்பட்டது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியலிங்கம், சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பொதுச் செயலாளருமான துரைராஜசிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் ஆகியோர் அரசியல் குழுவின் தீர்மானப்படி சிறிதரன் அரசமைப்பு கவுன்ஸில் உறுப்பினர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்தினர்.

கூட்டத்தில் பங்கு பற்றிய திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன் மட்டும் வாயே திறக்காமல், நாலு மணி நேரக் கூட்டத்தில் நான்கு தடவைகள் ஆழ்ந்த தூக்கத்துக்குச் சென்று திரும்பினார் என்று தெரிகிறது. அவர் இந்தப் பக்கமும் முடிவெடுக்கவில்லை. அந்தப் பக்கமும் முடிவெடுக்கவில்லை. இந்தப் பக்கத்திற்கு ஆதரித்துப் பேசவுமில்லை. அந்தப் பக்கத்து ஆதரித்து பேசவும் இல்லை. மௌனத்தோடு தூக்கமாக நேரத்தைக் கடத்தி முடித்தார்.

சிறிதரன் மட்டும் தன்னுடைய நிலைப்பாட்டில் மிக உறுதியாகவும் திடமாகவும் நின்றார். ''அரசமைப்பு கவுன்ஸில் உறுப்பினர் பதவி குறித்து முடிவெடுப்பது நான். அது என்னுடைய சுயாதீன தீர்மானத்திற்குரியது. நான் பதவி விலக மாட்டேன்!'' என்று அறுதியிட்டுக் கூறியவர், தான் எந்தத் தவறும் இழைக்கவேயில்லை என்றும் வாதிட்டார்.

ஒரு கட்டத்தில் விவாதத்தில் பேசிய சாணக்கியன், இந்த அரசமைப்பு கவுன்ஸில் உறுப்பினர் பதவியைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமக்குத் தந்து விடுமாறு கோடீஸ்வரன் எம்.பி. கோருகின்றார், அவரேதான் சரியான தெரிவாக இருப்பார் எனத் தோன்றுகின்றது என்று குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட சிறிதரன் எம்.பி. சாணக்கியனைப் பார்த்து ''சின்னப்பிள்ளைத்தனமாகப் பேச வேண்டாம்.'' - என்றார்.

இடையில் புகுந்த சத்தியலிங்கம் எம்.பி. ''இல்லை... இல்லை.. சாணக்கியன் கூறுவது உண்மைதான். நானும் இருக்கும் போதுதான் கோடீஸ்வரன் அப்படி ஒரு யோசனையை எங்கள் முன்னால் முன் வைத்தார்.'' - என்றார்.

ஆக, தமிழரசுக் கட்சிக்குள் இந்த அரசமைப்பு கவுன்ஸில் உறுப்பினர் பதவி பெரும் களேபரத்தை உருவாக்கி இருக்கின்றது என்பது மட்டும் நிச்சயம்.

கூட்டத்தின் முடிவில் பத்திரிகையாளர்களைச் சந்திக்காமலேயே கட்சித் தரப்புகள் வெளியேறின.

என்ன முடிவு எடுத்தீர்கள் என்று நேற்று இரவு சுமந்திரனைத் தொடர்பு கொண்டு கேட்டேன்.

''சிறிதரன் அரசியல் குழுவின் பணிப்பை ஏற்க மறுத்து விட்டார். எனவே அதனையொட்டி, தீர்க்கமான - தீர்மானகரமான - முடிவை எடுத்து இருக்கிறோம். அது பற்றி உரிய வேளையில் அறிவிப்போம். முடிவு ஒன்று எடுத்து விட்டோம் என்பதை மட்டும்தான் இப்போது உங்களுக்கு தெரிவிக்க முடியும்.'' - என்றார்.

கூட்டத்தில் பங்கு பற்றிய சிறிதரன் கட்சியின் அரசியல் குழுவுக்கு அதிகாரம் எதுவும் இல்லை என்றும் அத்தகைய குழு தன்னை அரசமைப்பு கவுன்ஸில் உறுப்பினர் பதவியில் இருந்து வெளியேறுமாறு பணிக்கும் அதிகாரமும் கொண்டது அல்ல என்றும் கடுமையாக வாதிட்டார்.

கூட்டத்தில் பங்கு பற்றிய இன்னொரு உறுப்பினர் சிறிதரன் அவ்வாறு வாதிட்டார் என்பதை உறுதிப்படுத்தினார். அந்த வாதத்தின் அடிப்படையிலேயே அவருக்கு பதிலடி நடவடிக்கையை - தீர்மானத்தை - அரசியல் குழு எடுத்து அதை நடைமுறைப்படுத்தும் என்று கோடி காட்டினார் அந்த உறுப்பினர்.

அரசியல் குழு எடுத்திருக்கின்ற 'தீர்க்கமான, தீர்மானகரமான முடிவு' யாது என்பதை நேற்று நள்ளிரவு வரை திட்டவட்டமாக கட்சியின் பொதுச் செயலாளரோ, தலைவரோ அல்லது ஏனைய அரசியல் குழு உறுப்பினர்களோ உறுதிப்படுத்தவும் இல்லை. தெளிவுபடுத்தவும் இல்லை. ஆனால் அதை அவர்கள் மறைத்து வைக்க முடியாது. விரைந்து, எப்படியேனும் அதைப் பெற்று, வாசகர்களுக்கு அதன் விவரத்தைத் தருவேன்.

ஒன்று மட்டும் நிச்சயம். அரசியல் குழுவின் முடிவு, தமிழரசுக் கட்சிக்குள் ஒரு கொதி நிலையை ஏற்படுத்தித்தான் அமைதிக்கு வரும் என்று தோன்றுகின்றது.

*********************

ஒரு காலத்தில் ரெலோவின் வடக்கு மாகாணத் தரப்பில் மிக முக்கிய பிரமுகராக இருந்தவர் விந்தன் கனகரத்தினம். ரெலோவுக்காக ஆயுதம் ஏந்திப் போராடியவர். வடக்கு மாகாண சபையிலும் ரெலோவின் பிரதிநிதியாக அங்கம் வகித்தவர்.

பிற்காலத்தில் கட்சிக்கும் அவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு கட்சித் தலைவர் செல்வத்தையும் பிறரையும் அவர் தாறுமாறாக விமர்சிக்க போய் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார். பின்னர் தாம் தமிழரசுக் கட்சியில் சேர்ந்து விட்டார் என அவர் அறிவித்த போதிலும், தமிழரசு கட்சியில் சுறுசுறுப்பான உறுப்பினராக அவரைக் காணவே முடியவில்லை.

கடந்த பொதுத் தேர்தல் சமயம் யாழ் மாவட்டத்தில் ரெலோ சார்பில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் போட்டியிட்ட ரெலோவின் பேச்சாளர் சுரேந்திரன் குருசாமியை பகிரங்கமாக அவர் மிக மோசமான முறையில் விமர்சிக்க போக, அவருக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் 5 கோடி ரூபா மான நஷ்டம் கோரி சுரேந்திரன் வழக்கு தாக்கல் செய்தார்.

வழக்கின் ஆரம்பத்தில் நீதிமன்ற அழைப்பாணை தமக்குக் கிடைக்கவில்லை என்று விந்தன் கனகரத்தினம் கூறிவந்த போதிலும், ஏதோ ஒரு வகையில் அவருக்கு அழைப்பாணை வழங்கப்பட்டு ,கடந்த 19ஆம் திகதி யார் மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தமது சட்டத்தரணியுடன் அவர் முன்னிலையாகியிருக்கின்றார்.

தங்கள் தரப்புப் பதிலை தாக்கல் செய்வதற்கு விந்தன் கனகரத்தினம் தரப்பினர் கால அவகாசம் கோரியமையினால் மார்ச் 9ஆம் திகதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வழக்காளியும் எதிராளியும் வழக்கில் நேரடியாக தோற்றும் நிலைமை வந்து விட்டமையால், வழக்கு இனி தீர்க்கமான ஒரு நிலைய நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கலாம்.

you may also like