Friday, October 9, 2026

துயிலும் இல்ல துப்பரவுப் பணியில் ஈடுபட்டோரை அச்சுறுத்திய பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு


மட்டக்களப்பு தாண்டியடி மற்றும் தரவை மாவீர் துயிலும் இல்லங்களில் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் கட்சி ஆதரவாளர் தரணி ஆகியவர்களை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை சேட்டை பிடித்து, துப்பரவு பணியை செய்யவிடாது அச்சுறத்தல் மேற்கொண்டனர் எனத் தெரிவித்து பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மாவீரர் தினத்தையிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக் கட்சியின் ஆதரவுடன் மக்கள் வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள தாண்டியடி மாவீர் துயிலும் இல்லத்தில் நேற்று துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு சென்ற வவுணதீவு பொலிஸார் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாள் த.சுரேஸைத் துப்பரவு பணியை மேற்கொள்ளவிடாது அச்சுறுத்தியுள்ளனர் என்று கூறப்படுகின்றது.

இதனால் அவர்கள் தொடர்ந்து துப்பரவுப் பணியைச் செய்யமுடியாது அங்கிருந்து வெளியேறினர். அதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தரவை மாவீர் துயிலும் இல்லத்தில் பொது மக்கள் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு சென்ற வாழைச்சேனை பொலிஸார் அவர்களை அச்சுறுத்தியமையுடன் தரணி என்ற இளைஞனின் சேட்டை பிடித்து இழுத்து கையடக்க தொலைபேசியை பறித்து அச்சுறுத்தியுள்ளனர் என்று கூறப்பட்டது.

அச்சுறுத்தலுக்கு உள்ளான இருவரும் இச்சம்பவங்கள் குறித்து நீதி கோரி மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ததுள்ளனர்.

you may also like