- by Editor
- 2 years ago
இரகசியம் - பரகசியம் (21.03.2024)
இலங்கையில் மிக உயர்வான - உச்ச - நீதி ஆயம் உயர்நீதிமன்றமே.
அதன் தீர்ப்புக்கு - உத்தரவுக்கு - எதிராக மேன்முறையீடு செய்யவோ (Appeal), மீளாய்வு செய்யவோ (Revision) இடமில்லை.
ஆயினும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அல்லது தீர்ப்பு அல்லது கட்டளை தொடர்பில் ஏதேனும் குழப்பம் அல்லது தவறான அர்த்தப்படுத்தல் இருக்குமானால், அந்த விடயத்தை மீள்பார்வை (Review)செய்யும்படி விண்ணப்பிக்கலாம்.
அத்தகைய மீள் பார்வைக்கான விண்ணப்பம் செய்யப்படுமானால் அது குறித்து என்ன செய்வது என்று பிரதம நீதியரசரே தீர்மானம் எடுக்க வேண்டும்.
வழமையாக அப்படி ஒரு விண்ணப்பம் வந்தால் தீர்ப்பு வழங்கிய நீதியரசர் ஆயத்திடம் பிரதம நீதியரசர் முதலில் கருத்து கேட்பார்.
அதன்பின்னர் மீள்பார்வைக்கு இணங்கி மேலும் அதிக எண்ணிக்கை நீதியரசர்கள் கொண்ட ஆயத்திடம் அந்த விண்ணப்பத்தின் அடிப்படையிலான மீள்பார்வைக்கு அவர் வழி செய்யலாம். அல்லது மீள்பார்வைக்கான விண்ணப்பத்தை பிரதம நீதியரசரே தீர்மானம் எடுத்து நிராகரிக்கலாம். கவனிக்காமலும் விடலாம்.
இந்த விடயங்கள், விவரங்கள் எல்லாம் ஏன் இப்போது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். காரணம் உண்டு.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இப்போது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகின்றது. இன்று மாலை அதன் மீதான வாக்கெடுப்பு நடக்க உள்ளது.
இந்தச் சமயத்தில்தான் அந்த விவகாரத்தை ஒட்டிய ஒரு விடயம் உயர்நீதிமன்றத்தின் மீள்பார்வைக்கு விண்ணப்பிக்கப்பட்டிருக்கின்றது.
நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் பரிந்துரைக்கும் முரணாக அந்தச் சட்ட விவகாரத்தில் சபாநாயகர் நடந்து கொண்டிருக்கின்றார், உயர்நீதிமன்ற வழிகாட்டல்படி சட்டமூலம் திருத்தப்படாத நிலையில், அது சட்டமாவதற்கான சான்றுரையை சபாநாயகர் வழங்கியுள்ளார் என்பது இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஒட்டி சபாநாயகருக்கு எதிராகச் சுமத்தப்படும் பிரதான குற்றச்சாட்டாகும்.
இந்த விடயத்தை ஒட்டி நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
சபாநாயகரின் சான்றுரைக்கப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் சட்டப்படி செல்லுபடியற்றது என்று உத்தரவிடுமாறு அந்த மனுவில் சுமந்திரன் கோரியிருந்தார்.
ஆனால் -
சபாநாயகர் சான்றுரைத்த எந்த ஒரு சட்டத்தின் செல்லுபடி தன்மை குறித்தும் எந்த நீதிமன்றமும் விசாரிக்க முடியாது என்ற அரசமைப்பு ஏற்பாட்டைச் சுட்டிக்காட்டி, அதன் காரணமாக சுமந்திரனின் அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
அந்த உத்தரவை மீன்பார்வை செய்யும்படி கோரியே இப்போது உயர்நீதிமன்றத்திடம் சுமந்திரன் நேற்று மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த மீள்பார்வைக் கோரிக்கை தொடர்பில் தற்போதைய பிரதம நீதியரசர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார், இதனை எப்படி அணுகிக் கையாளப் போகின்றார் என்பதை இனித்தான் பார்க்க வேண்டும்.
இதே போன்ற மனு ஒன்று முன்னர் பிரசாத் டெப் பிரதம நீதியரசராக இருந்த போதும் சமர்ப்பிக்கப்பட்டது. அவர் உயர் நீதிமன்றத்தின் அனைத்து நீதியரசர்களிடமும் அந்த மனுவைக் கையளித்து, கருத்துக்களைப் பெற்று, அதன் அடிப்படையில் அந்த மனுவை அப்போது நிராகரித்திருந்தார்.
இப்போது சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்காமல் நிராகரித்த மூன்று நீதியரசர்கள் ஆயத்தில் ஒருவர் அன்று அந்த தீர்ப்பை வழங்கிய தினத்தோடு ஓய்வு பெற்றுச் சென்று விட்டார்.
மற்றைய இரு நீதியரசர்களிடமும் கருத்துக் கேட்டு, அதன் பின்னர் உரிய நடவடிக்கையை பிரதம நீதியரசர் எடுப்பாரா? அல்லது உயர்நீதிமன்றத்தின் பிற நீதியரசர்கள் அனைவரிடமும் அவர் கருத்து கேட்டு அதன் பின் முடிவு செய்வாரா? அல்லது தாமே முடிவெடுத்து ஒன்றில், மூன்றுக்கு மேல் ஐந்து நீதியரசர்களைக் கொண்ட புதிய ஆயத்திடம் மீள்பார்வை மனுவை விசாரிக்கக் கையளிப்பாரா? அல்லது தாமே முடிவு செய்து மனுவைத் தள்ளுபடி செய்வாரா?
தெரியவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.