- by Editor
- 2 years ago
இரகசியம் - பரகசியம் (15.09.2024)
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைமை அந்தோ பரிதாபம் என்ற மாதிரி உள்ளது.
கட்சியின் மூத்த பிரமுகர்கள் தங்களுக்குள் முரண்பட்டு இழுபறிப்பட்டு நிற்கின்றமை இரண்டாவது விடயம்.
கட்சித் தலைவர் பதவியில் ஒரு தசாப்த காலம் குந்தி இருந்து கொண்டு கட்சியின் செயற்பாடுகளை குழப்பியடித்து வரும் 'சணம் பித்தம், சணம் வாதம்' போக்குடைய தலைவரின் சில்லெடுப்புத் தாங்க முடியாது அடுத்த மட்டப் பிரமுகர்கள் அல்லாடுகின்றனர். அதுதான் பெரும் பிரயத்தனமாக உள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்துக்கு இன்னும் ஆக மூன்று நாள்கள்தான் உள்ள. ஏற்கனவே கட்சியின் மத்திய குழு நான்கு தடவைகள் கூடி ஜனாதிபதித் தேர்தல் விவகாரத்தை ஆராய்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித்தை ஆதரிப்பது எனத் தீர்மானித்து அறிவித்துவிட்டது. அந்த இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்ட நான்காவது கூட்டத்திற்குத் தான் போகாமல் இருந்துவிட்டு, கட்சியின் முடிவை குழப்பியடித்துக் கொண்டிருக்கிறார் கட்சித் தலைவர்.
அவரது 'சணம் பித்தம், சணம் வாதம்' என்ற தடுமாற்ற போக்கினால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாமல் தடுமாறுகின்றார்கள் கட்சியின் அடுத்த மட்டத் தலைவர்கள்.
திடீர் திடீரென சிந்தனை பேதலித்து , அடிக்கடி பேச்சு மாற்றி, ஒவ்வொரு விதமாகக் கதை பேசுகின்றார் தலைவரென அடுத்த மட்டப் பிரமுகர்கள் தங்களுக்குள் பொருமிக் கொள்கிறார்கள்.
நாளை 16ஆம் திகதி இந்த விவகாரம் தொடர்பில் ஆறு பேர் கொண்ட கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் ஆராய்ந்து மக்களை வழிப்படுத்துவதற்கான அறிக்கை ஒன்றை வெளியிடுவதாக ஏற்பாடு.
அதற்காக அறிக்கை தயாரிக்கும் விடயத்திலும் தலைவரின் பிய்ச்சல் பிடுங்கல் தாங்க முடியாததாக இருப்பதாகக் கேள்வி.
கட்சியின் இறுதி முடிவு தொடர்பான டீலில் தாம் இல்லை என்ற விஷயத்தால் அவர் எல்லாவற்றையும் போட்டடித்துக் குழப்புகின்றார் அல்லது குழம்புகின்றார் என்பதுதான் இப்போதுள்ள பிரச்சினை.
இந்தத் தேர்தல் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் முடிவையொட்டிய விடயங்களை மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கருத்துக்களை தொகுத்து , ஒரு வெளியீடாக சுமந்திரன் எம்.பி. அடுத்த நான்கு நாள்களும் வடக்கு - கிழக்கு எங்கும் விநியோகிக்க இருக்கின்றார் என்று அறிய வருகின்றது.
அவர்கள் 'சாண் ஏறினால்' கட்சித் தலைவரின் 'சணம் பித்தம், சணம் வாதம்' போக்கினால் விவகாரம் 'முழம் சறுக்கும்' நெருக்கடி இருப்பதாக தெரிகிறது.
பாவம் தமிழரசு கட்சி..... இந்தத் தலைவரின் 'பேதலித்த' மனப் போக்கால் அதன் நற்பெயர் நாறுகிறது...!