- by Editor
- 2 years ago
சபரிமலை சந்நிதானத்தில் பரபரப்பு - தடையை மீறி தாழ்வாகப் பறந்த உலங்குவானூர்தி
-
- by Editor,
- 5 months ago
- in உலக செய்திகள்
சபரிமலை ஐயப்பன் ஆலயப் பகுதியில் வானூர்திகள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அண்மையில் ஒரு உலங்குவானூர்தி ஆலய வளாகத்துக்கு மிக அருகில் தாழ்வாகப் பறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பம்பா காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் மதியம் சுமார் 1.30 மணியளவில், கொச்சி கடலோர காவல்துறைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று சபரிமலை சந்நிதானத்தின் கொடி மரம் அருகே மிகத் தாழ்வாகப் பறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து விளக்கமளித்த கடலோர காவல்படை தலைமையகம், வழக்கமான பயிற்சியின் போது ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக உலங்குவானூர்தி திசை மாறியதாகவும், அதனால் பாதுகாப்பு கருதி தாழ்வாகப் பறக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் தெரிவித்துள்ளார்.
காவல்துறை சமர்ப்பித்த ஆரம்ப விசாரணை அறிக்கையில், சபரிமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதி மாநில அரசால் விசேட பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தாழ்வாகப் பறக்கும் நிலை ஏற்பட்டிருந்தால் அதுகுறித்து காவல்துறையோ அல்லது மாவட்ட நிர்வாகத்தையோ முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னறிவிப்பின்றி இவ்வாறு பறந்தது பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய செயலாக கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய செயலைத் தெரிந்தே செய்ததாகக் கருதி, கேரள காவல்துறைச் சட்டத்தின் பிரிவு 118(e) கீழ் பம்பா காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.